அமெரிக்காவில் பயிற்சி நிறைவு செய்த முதலாவது தொகுதி இந்திய MH-60R குழு !!

இந்திய கடற்படைக்காக அமெரிக்காவிடம் இருந்து சுமார் 24 அதிநவீன நீர்மூழ்கி வேட்டை திறன் கொண்ட MH60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன.

ஏற்கனவே இத்தகைய மூன்று ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவற்றை இயக்குவதற்கான பயிற்சிகள் அமெரிக்காவில் இந்திய கடற்படை குழுவினருக்கு வழங்கப்பட்டு வந்தன.

இந்த பயிற்சியின் போது இந்திய கடற்படை குழுவினர் இரவு மற்றும் பகலில் இயங்கவும், போர் கப்பல்களில் இருந்து இயங்கவும், சென்சார் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தவும் தேவையான பயிற்சிகளை பெற்று கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சுமார் 10 மாத காலகட்டத்திற்கு பிறகு நேற்று முதலாவது தொகுதி இந்திய MH60 ரோமியோ ஹெலிகாப்டர் குழுவினர் தங்களது பயிற்சிகளை நிறைவு செய்தனர்.

இந்த பயிற்சி நிறைவு விழா அமெரிக்காவின் சான் டியகோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் 41ஆவது கடல்சார் ஹெலிகாப்டர் தாக்குதல் படையணியின் தளத்தில் நடைபெற்றது கூடுதல் தகவல் ஆகும்.