இந்திய விமானப்படைக்கு சி17 போக்குவரத்து விமானங்கள் வாங்கப்பட்ட சமயத்தில் போயிங் நிறுவனம் இந்தியாவில் அதிக உயர என்ஜின் சோதனை மையம் ஒன்றையும் ட்ரைசானிக் என்ஜின் சோதனை மையம் ஒன்றையும் அமைத்து தருவதாக கூறியது.
இதில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது சுமார் 47 சதவிகிதம் அளவுக்கு பங்களிப்பை தருவதாக உறுதி அளித்தது.
ஆனால் போயிங் நிறுவனம் சுமார் 315 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அதிக உயர என்ஜின் சோதனை மையம் மற்றும் 195 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ட்ரைசானிக் சோதனை மையங்களை அமைக்கும் பணிகளை துவங்க காலம் தாழ்த்தி வந்தது.
இந்த நிலையில் இந்த இரண்டு அமைப்புகளுக்கான பாகங்களுக்கான ஏற்றுமதி உரிமத்தை அமெரிக்க அரசு வழங்கவில்லை என போயிங் தெரிவித்த நிலையில் ஆரம்பத்தில் இருந்து இதை தெரிந்தே போயிங் மறைத்தது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சொந்தமாகவே இந்த பணிகளை துவங்கி உள்ளது அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் இவை தயாராகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.