இந்தியாவின் முதலாவது கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக இந்திய கடற்படையின் துணை தளபதியாக பணியாற்றி ஒய்வு பெற்ற வைஸ் அட்மிரல் அஷோக் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
அஜித் தோவல் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலகத்தில் இருந்து தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக அவர் பணியாற்ற உள்ளார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
திருப்பூர் அமராவதி நகர் ராணுவ பள்ளியில் பயின்ற இவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்று 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி இந்திய கடற்படையில் தனது சேவையை துவங்கினார்.
பியாஸ், நீலகிரி, ரன்வீர் போன்ற முன்னனி ஃப்ரிகேட் மற்றும் நாசகாரி போர் கலன்கள் மற்றும் விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பல் ஆகியவற்றை வழிநடத்திய அனுபவம் வாய்ந்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை தாக்குதலுக்கு பிறகு சுமார் 14 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு கடந்த ஆண்டு இந்த பதவியை உருவாக்க பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது வைஸ் அட்மிரல் அஷோக் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது பணி இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச காவல்துறைகளின் கடலோர பாதுகாப்பு பிரிவுகளை ஒருங்கிணைத்து இவர் செயலாற்றுவார் என்பது சிறப்பாகும்.