இந்தியாவின் பத்மஶ்ரீ விருது பெற்ற பிரிட்டன் MPக்கு சீன உளவு நிறுவனத்துடன் தொடர்பு !!

  • Tamil Defense
  • January 15, 2022
  • Comments Off on இந்தியாவின் பத்மஶ்ரீ விருது பெற்ற பிரிட்டன் MPக்கு சீன உளவு நிறுவனத்துடன் தொடர்பு !!

இங்கிலாந்தின் லேபர் கட்சியை சேர்ந்த பேர்ரி கார்டினர் இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வசிக்கும் வடக்கு ப்ரென்ட் பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

இவர் இந்திய வம்சாவளி மக்களுடன் காட்டிய நெருக்கம் மற்றும் அவர்களின் நலன் சார்ந்து ஆற்றிய பணிகளை பாராட்டி கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஶ்ரீ விருதை அறிவித்தது.

தற்போது இங்கிலாந்தின் உள்நாட்டு உளவுத்துறையான MI5 இவருக்கு சீன உளவாளி ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் அவரிடம் இருந்து பணம் பெற்றதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

கிறிஸ்டின் லீ மற்றும் கோ எனும் நிறுவனத்தை லண்டன் மற்றும் பிர்மிங்கஹாம் பகுதிகளில் நடத்தி வரும் கிறிஸ்டின் சிங் கியு லீ சீன உளவாளி ஆவார்.

இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவான United Front Works Departmentன் சார்பாக இங்கிலாந்து அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து சீனாவுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சீன ஏஜெண்ட ஆவார்.

மேற்குறிப்பிட்ட United Front Works Department பல நாடுகளில் பல்வேறு வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து அவர்களை சீன சார்பு நிலை கொண்டவர்களாக மாற்றி சட்டங்கள் இயற்ற வளைத்து போடும் பணியை மேற்கொள்கிறது.

இந்த விவகாரம் வெளியான நிலையில் இங்கிலாந்து அரசியல் வட்டாரங்கள் மற்றும் இந்திய வம்சாவளி மக்கள் இடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கிறிஸ்டின் லீயின் மகன் டேனியல் வில்க்ஸும் கார்டினருடைய அலுவலகத்தில் பணியாற்றி உள்ளார் என்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.