இந்திய விமானப்படை பல்வேறு வகையான ஆயிரக்கணக்கான விமானங்களை பயன்படுத்தி வருகிறது அந்த வகையில் 51 ஆண்டுகள் பழமையான போயிங்737 விமானம் ஒன்றை இன்றளவும் பயன்படுத்தி வருகிறது.
கே3187 என பதிவு செய்யப்பட்ட அந்த 737-200 ரக போயிங் விமானம் முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் சேவையில் இருந்தது, நாடு முழுவதும் பல முறை தனது சேவையை இந்த விமானம் அளித்துள்ளது.
இந்த வருடம் தனது 51ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த விமானம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயன்படுத்தி வந்த 36 போயிங் 737-200 ரக விமானங்களில் ஒன்றாகும், பின்னர் இந்த விமானங்களுக்கு மாற்றாக ஏர்பஸ் 320 ரக விமானங்கள் வாங்கப்பட்டன.
கடந்த 1993ஆம் ஆண்டு இந்த விமானம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது அன்று முதல் முக்கிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசு பிரமுகர்கள் பயணம் செய்ய பயன்பட்டு வருகிறது இதன் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இதை பற்றிய தகவல்கள் பெரிய அளவில் ஏதுமில்லை.
கே3187, கே2142 மற்றும் கே2143 ஆகிய மூன்று போயிங் 737-200 ரக விமானங்களை தவிர புதியதாக 2007-2008 வாக்கில் போயிங் 737-700 ரக விமானங்கள் மூன்றை இந்திய விமானப்படை பெற்று கொண்டது.
கடைசியாக 2020ஆம் ஆண்டு இந்திய விமானப்படை இரண்டு போயிங் 777-300ER ரக விமானங்களை இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் போக்குவரத்திற்காக பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.