பிரதமரின் பாதுகாப்பு திட்டமிடும் பணிகள் எவ்வாறு நடைபெறும் விரிவான அலசல் !!

  • Tamil Defense
  • January 9, 2022
  • Comments Off on பிரதமரின் பாதுகாப்பு திட்டமிடும் பணிகள் எவ்வாறு நடைபெறும் விரிவான அலசல் !!

சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் பயணிக்கும் பாதை முடக்கப்பட்டதால் பின்னர் அவர் திரும்பி தலைநகர் தில்லிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது இதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சர்ச்சையை நாம் அனைவரும் அறிவோம்.

பிரதமர் எனும் நபர் ஒரு இடத்திற்கு செல்கிறார் எனில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது.

பயணத்திற்கு மூன்று நாட்கள் முன்னரே குறிப்பிட்ட பகுதிக்கு SPG அதிகாரிகள் சென்று பார்வையிட்டு பின்னர் உள்நாட்டு உளவு அமைப்பான IB, மாநில காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ASL ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

ASL – Advance Security Liaison என்பதாகும் அதாவது கூட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் என பொருள்படும் மேற்குறிப்பிட்ட ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு அசைவும் திட்டமிடப்பட்டு ஒரு ASL அறிக்கை தயார் செய்யப்பட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரின் கையொப்பம் பெறப்படும்.

பயணத்தின் ஆரம்பம் முதல் சந்திக்கும் விவிஐபி, விஐபி மற்றும் இதர நபர்கள், பயணத்தின் நிறைவு வரை ஒவ்வொன்றும் முதலிலேயே முடிவு செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதை போல பிரதமர் குறிப்பிட்ட இடத்தை எப்படி வந்தடைவார் (வான், சாலை , ரயில் ) என்பது பரிசீலிக்கப்பட்டு மத்திய உளவு அமைப்புகள் மற்றும் மாநில உளவுத்துறை ஆகியவற்றிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்படும்.

இதை தொடர்ந்து கூட்டம் நடைபெறும் இடத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள், வருவோரை சோதனையிடும் முறைகள், கருவிகள், மேடையின் உறுதி தன்மை என அனைத்தும் உறுதி செய்யப்படும்.

பிரதமர் வரும் நாளில் உள்ள வானிலை தகவல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் பிரதமர் படகு மூலமாக வருகிறார் எனில் படகின் பாதுகாப்பு செயல்பாட்டு திறன் போன்ற பல்வேறு விஷயங்கள் உறுதி செய்யப்படும்.

வானிலை மோசமாக இருந்தால் பிரதமர் சாலை வழியாக வர ஏற்பாடு செய்யப்படும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சாலை எப்போதுமே தயாராக வைக்கப்படும் காரணம் கடைசி நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாது.

மேலும் சாலையோரம் புதர்கள் இருந்தால் அவற்றை வெட்டி அகற்ற வேண்டியது மாநில நிர்வாகத்தின் வேலையாகும் இதை தொடர்ந்து மாநில காவல்துறை பல்வேறு வகையான சோதனைகளை சாலை முழுவதும் நடத்த வேண்டியது கட்டாயமாகும்.

ஒருவேளை ஏதேனும் காரணத்தால் சாலையை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை என்றால் மாநில காவல்துறையின் தகவலின் பேரில் SPG அதிகாரிகள் பயணத்தை ரத்து செய்வர் ஆகவே மாநில காவல்துறையின் அறிக்கை இன்றி பயணம் நடைபெறாது.

பிரதமர் வானூர்தி மூலமாக பயணம் செய்தால் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவுக்கு விமானிகளால் பார்க்க முடிய வேண்டும் இல்லை என்றால் வான்வழி பயணம் ரத்து செய்யப்படும்,

சாலைவழி பயணத்தின் போது மாநில காவல்துறை ஒரு பைலட் வாகனத்தை அனுப்பி வழிகாட்ட வேண்டும் மேலும் அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் உடனிருந்து பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

அதை போல கூட்டம் நடைபெறும் இடங்களில் மாநில காவல்துறையினர் மற்றும் SPG படையினர் மாறு வேடத்தில் கட்சியினர் அல்லது பொதுமக்கள் போலவும் கலந்து கொண்டு கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுவர்.

மேலும் சில சமயங்களில் அரசு அதிகாரிகள் பிரதமருடைய கட்சியினர் அல்லது பிரதமரே கூட பாதுகாப்பு விதிகளை தளர்த்த அழுத்தம் கொடுத்தாலும் SPG அதிகாரிகள் கறாராக மறுப்பு தெரிவித்து விடுவர் அந்தளவுக்கு பணியில் கண்ணியமாக இருப்பர்.

1999ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் சென்ற போது அன்றைய SPG தலைவர் சஞ்சீவ் தயாள் பாகிஸ்தான் காவல்துறையினர் வழியில் உள்ள கூட்டங்களை கட்டுபடுத்தாத காரணத்தால் பயணத்தை அரை மணி நேரத்திற்கும் அதிகமாக காலம் தாழ்த்தினார்.

அப்போது இந்திய ராஜாங்க அதிகாரிகள் பயணத்திற்கு அனுமதி கொடுக்குமாறு சஞ்சீவ் தயாளுக்கு அழுத்தம் கொடுத்த போதும் அவர் அதற்கு மசியவில்லை கூட்டம் கட்டுபடுத்தப்பட்ட பிறகே பயணத்திற்கு அனுமதி அளித்தார்.

மேலும் மாநில முதல்வர் மாநில தலைமை செயலாளர் காவல்துறை தலைமை இயக்குனர், சரக ஐஜி, டிஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், SPG இயக்குனர் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே பயண விவரங்கள் முழுமையாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.