இந்திய ராணுவத்திற்காக ஆளில்லா வாகனங்களை தயாரிக்கும் சென்னை மாணவர்கள் பற்றிய கட்டுரை !!

  • Tamil Defense
  • January 13, 2022
  • Comments Off on இந்திய ராணுவத்திற்காக ஆளில்லா வாகனங்களை தயாரிக்கும் சென்னை மாணவர்கள் பற்றிய கட்டுரை !!

சென்னை அம்பத்தூரில் உள்ள டோரஸ் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் SRM கல்லூரியில் பயின்ற கார்த்திகேயன், விபாகர் செந்தில் மற்றும் விக்னேஷ் கந்தசாமி ஆகியோரால் துவங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் தற்போது இந்திய தரைப்படைக்கு Artificial Intelligence செயற்கை அறிவு திறன் கொண்ட ஆளில்லா வாகனம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

மின்சாரத்தால் இயங்கும் இந்த வாகனங்களை சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் வீரர்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டே ரோபோட்டுகளை போல இயக்கி கண்ணிவெடிகள் மற்றும் இதர குண்டுகளை செயலிழக்க செய்ய முடியும்.

மேலும் இதே வாகனங்களை களத்தில் முன்னதாகவே அனுப்பி கண்காணித்து தேவையான தகவல்களையும் சேகரிக்க முடியும் என டோரஸ் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான விக்னேஷ் கந்தசாமி கூறுகிறார்.

சென்னை SRM கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் பட்டப்படிப்பின் போது சந்தித்து கொண்ட மூவரும் இந்திய ராணுவத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர் அப்போது ரோபோட்டிக்ஸில் தங்களது திறன்களை வளர்த்து கண்டனர்.

2016ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்த இவர்களுக்கு முற்றிலும் இலவசமாக முதுகலை பட்டப்படிப்பை MBA படிக்க SRM பல்கலைக்கழக நிர்வாகம் உதவியது.

பின்னர் 2018ஆம் ஆண்டு தரைப்படை வடிமைப்பு முகமை (Army Design Bureau) அதிகாரிகளுடன் தொடர்பு கிடைத்த நிலையில் தரைப்படையின் அடிப்படை தேவைகளான

மலைப்பகுதியில் சப்ளைகள் கொண்டு செல்வது குண்டுகளை செயலிழக்க செய்வது கண்காணிப்பது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிவு செய்தனர்.

அதன்படி இந்த ஆளில்லா மின்சார வாகனத்தை உருவாக்க முடிவு செய்து பணிகளை துவங்கிய போது இதற்கான பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலை இருப்பதையும் இதன் காரணமாக காலதாமதம் மற்றும் அதிக செலவு ஏற்படும் என்பதையும் உணர்ந்த அவர்கள்,

சென்னையிலேயே ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியாக வடிவமைத்து தயாரித்து வாகனத்தை உருவாக்கி DRDO விடம் சோதனை செய்ய ஒப்படைத்தனர் அங்கு சோதனைகளில் வெற்றி பெற்றதும்

பெங்களூரில் கடந்த ஆண்டு ஃபெப்ரவரி நடைபெற்ற ஏரோ இந்தியா கண்காட்சியில் பங்கேற்க அனுமதி கிடைத்தது அங்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஆளில்லா மின்சார வாகனத்தை பார்வையிட்டு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

இதனை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இவர்களின் நிறுவனத்துடன் இதன் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட வாகனம் 10 வீரர்கள் சுமக்க வேண்டிய எடையை தன்னந்தனியாக மலைபகுதிகளில் சுமக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.