
கடந்த திங்களன்று தென் சீன கடல்பகுதியில் அமெரிக்க கடற்படையின் கார்ல் வின்சன் ரக விமானந்தாங்கி கப்பல் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது கப்பலில் தரையிறங்க வந்த எஃப்-35சி ரக விமானம் ஒடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்து முழ்கியது, விமானி பத்திரமாக தப்பித்த நிலையில் 7 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் அமெரிக்க கடற்படை சீனா அந்த விமானத்தை கண்டுபிடிப்பதற்கு முன்னர் மீட்டு விட துடிக்கிறது இதற்கு காரணம் அதிநவீன ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பமாகும்.
சீனா அமெரிக்க விமானத்தில் ஆர்வம் இல்லையென்று கூறினாலும் அமெரிக்கா அதனை நம்ப தயாராக இல்லை, இந்த விமானத்தில் உள்ள தொழில்நுட்ப ரகசியங்களை சீனா நிச்சயமாக அறிந்து கொள்ள விரும்பும்.
ஆனால் இதனை மீட்பது கடினம், 10 நாட்களில் கருப்பு பெட்டியின் பேட்டரி காலியாகி விடும் அதன் பின்னர் எளிதாக கண்டுபிடிக்க முடியாது மேலும் கடலடியில் இருந்து பலூன்கள் மூலம் உயர்த்த வேண்டும்.
விமானத்தின் உடல் நொறுங்கி தனித்தனியாக கிடந்தால் அதுவும் மீட்பு பணிகளை மிகவும் கடினமாக்கி விடும், கடைசியாக அதனை நீரடிகணை ஏவி தாக்கி அழிப்பது தான் ஒரே வழியாகும்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஒசாமா பின் லாடனை அமெரிக்க கடற்படை சீல்கள் வேட்டையாடிய போது விபத்துக்குள்ளான அமெரிக்க ஸ்டெல்த் ஹெலிகாப்டர் பாகிஸ்தான் வழியாக சீனாவிடம் சிக்கி அதன் ரகசியங்களை அறிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.