வெற்றிகரமான பைராத்கர் ட்ரோன்களுக்கு பிறகு மினி நீர்மூழ்கி தயாரிக்க உள்ள துருக்கி !!

  • Tamil Defense
  • January 28, 2022
  • Comments Off on வெற்றிகரமான பைராத்கர் ட்ரோன்களுக்கு பிறகு மினி நீர்மூழ்கி தயாரிக்க உள்ள துருக்கி !!

துருக்கி தயாரித்த பைராத்கர் ரக தாக்குதல் ட்ரோன்கள் மிக பெரிய வெற்றியை அடைந்து சர்வதேச சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

அர்மீனியா மற்றும் அஸர்பெய்ஜான் இடையே நடைபெற்ற போரில் துருக்கியின் இந்த ட்ரோன்கள் போரின் போக்கையே அடியோடு மாற்றின.

அதை போல தற்போது உக்ரைனும் இவற்றை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது சிரியாவில் ரஷ்யாவின் பேன்ட்சிர் வான் பாதுகாப்பு அமைப்புகளை இவை காலி செய்தன.

இப்படி பெயர் பெற்ற இந்த பைராத்கர் ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களை ஏற்றுமதி செய்ய சுமார் 16 நாடுகளுடன் துருக்கி அரசு மெகா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது துருக்கி ஆழம் குறைந்த பகுதிகளில் எவ்வித இடையூறும் இன்றி இயங்கும் திறன் பெற்ற சிறிய தாக்குதல் நீர்மூழ்கிகளை வடிவமைக்க உள்ளது.

துருக்கியை சுற்றியுள்ள ஏஜியன் கடல் மற்றும் கருங்கடல் பகுதிகளில் வழக்கமான பெரிய நீர்மூழ்கிகளால் திறம்பட இயங்க முடியாது ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதையொட்டி STM500 எனப்படும் 540 டன்கள் எடை கொண்ட 30 நாட்கள் நீருக்கடியில் சுமார் 250 மீட்டர் ஆழம் வரை சென்று இயங்கும் திறன் கொண்ட மினி நீர்மூழ்கி வடிவமைக்கப்பட்டு வருகிறது.

18 கடற்படை வீரர்கள் மற்றும் 6 சிறப்பு படை வீரர்களை சுமந்து கொண்டு ஆளில்லா நீரடி வாகனங்கள் மற்றும் கனரக நீரடிகணைகள் மற்றும் வழிகாட்டபட்ட ஏவுகணைகளையும் சுமக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

இத்தகைய நீர்மூழ்கிகளை தயாரிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என கூறப்படுகிறது அதிக பொருட் செலவின்றி நீர்மூழ்கிகளை இயக்க விரும்பும் நாடுகளுக்கு இது வரப்பிரசாதம் எனவும் அந்த வகையில் இதனை ஏற்றுமதி செய்யவும் துருக்கி திட்டமிட்டு உள்ளது.

ஏற்கனவே கத்தார் மலேசியா இந்தோனேசியா எகிப்து ஜார்ஜியா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கப்பல்களை துருக்கி ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.