மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு துறை சார்ந்த முதலீட்டை ஈர்க்க தமிழகம் திட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு !!

  • Tamil Defense
  • December 11, 2021
  • Comments Off on மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு துறை சார்ந்த முதலீட்டை ஈர்க்க தமிழகம் திட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு !!

தமிழக தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு தமிழக அரசு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு துறை சார்ந்த முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு உள்ளதாகவும்

மத்திய அரசு உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து எடுத்து வரும் நடவடிக்கைகளை பயன்படுத்தி ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் நாட்டில் முதல் இடத்தை பிடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் மொத்தமாக இரண்டே இரண்டு பாதுகாப்பு தொழிற்சாலை காரிடர்கள் அமைய உள்ள நிலையில் அதில் ஒன்று தமிழ்நாட்டில் அமைய உள்ளது, குறிப்பாக சென்னை கோயம்புத்தூர் திருச்சி சேலம் மற்றும் ஒசூர் ஆகிய நகரங்களை இணைத்து இந்த காரிடார் அமைய உள்ளது.

இதையொட்டி பாதுகாப்பு அமைச்சகத்திடம் நான்கு வெவ்வேறு முன்மொழிவுகளை வழங்கி உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அவற்றை ஆராய்ந்து வருவதாகவும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாடு அரசு பாதுகாப்பு அமைச்சகத்திடம் தமிழகத்தில் பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் சோதனை மையங்கள் அமைக்கவும் விருப்பம் தெரிவித்த நிலையில் அதற்கான டென்டர்களில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தமிழக அரசு நிலம் கையப்படுத்துதல் மற்றும் குத்தகைக்கு எடுத்தல் போன்றவற்றிற்காக நிலம் அடையாளம் காணும் பணிகளையும் துவங்கி உள்ளது அதன்படி கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 160 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஏவியேஷன் தொழில்நுட்ப மையம் அமைக்க தமிழக அரசு விரும்புகிறது அது தவிர சென்னை விமான நிலையத்தில் 50 ஏக்கர் நிலத்தில் ஒரு மையம் அமைக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் அனுமதி கோரி உள்ளது.

மேலும் தமிழக அரசு இது தொடர்பாக 39 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது , இலக்கு வைக்கப்பட்ட 12,226 கோடி முதலீட்டில் சுமார் 2200 கோடி எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூரில் அடையாளம் கையகப்படுத்தப்பட்ட 250 ஏக்கர் நிலத்தில் ஏரோஸ்பேஸ் தொழில் பூங்கா அமைக்க இதுவரை 30 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.