தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நாடான இந்தோனேசியா இந்திய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் அவற்றை கொண்டு தனது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் இந்தோனேசியா சென்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பிரபாவோ சுபியந்தோ மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
அப்போது இது குறித்த விவாதங்கள் நடைபெற்றதாகவும் இரண்டு தரப்பினரும் ஒத்துழைப்பை அதிகபடுத்த பலவிதமான நடவடிக்கைகளை எடுப்பது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இந்தோனேசியாவிலேயே இந்திய ஆயுதங்களை தயாரித்து தனது பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்த இந்தோனேசியா விரும்புகிறது.
இந்த விவகாரம் குறித்து தற்போது இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
எது எப்படியோ இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி சமீப காலங்களில் சூடு பிடித்துள்ளது நிதர்சனமான உண்மையாகும்.