
சுமார் 216 ராணுவ தளவாடங்களை மத்திய அரசு இறக்குமதி தடை பட்டியலில் சேர்த்துள்ள நிலையில் அத்தகைய தளவாடங்களை தற்போது இந்தியாவிலேயே கொள்முதல் செய்வதற்கான பணிகள் ஆரம்பமாகி உள்ளன.
இதற்காக பாதுகாப்பு விவகாரங்கள் துறை தற்போது தரைப்படை கடற்படை விமானப்படை மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு துறையில் அடுத்த மிகப்பெரிய சீர்திருத்தம் இந்திய நிறுவனங்கள் வாயிலாக நடைபெற உள்ளது. அதற்காக பிரதமர் அலுவலக உத்தரவின்படி பாதுகாப்பு விவகாரங்கள் துறை பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெனரல் பிபின் ராவத் இருந்த காலகட்டத்தில் 108 தளவாடங்கள் அடங்கிய முதலாவது பட்டியல் வெளியானது. பின்னர் மேலும் 108 தளவாடங்கள் இரண்டாவதாக சேர்க்கப்பட்டன.
இந்த தடை பட்டியலில் சிறிய அமைப்புகள் உதிரி பாகங்கள் துவங்கி பிரங்கிகள், நீர்மூழ்கி கப்பல்கள் போன்ற மிகப்பெரிய தளவாடங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் தரமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனடைய முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.