
இந்தியா புதன்கிழமை அன்று ப்ரளய் ஏவுகணையை வெற்றிகரமாக ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து காலை 10.30 மணியளவில் ஏவி சோதனை செய்தது.
இந்த ப்ரளய் ஒரு பலிஸ்டிக் ஏவுகணையை போல் செயல்படும் வழக்கமான ஏவுகணை ஆகும் இது 500 முதல் 1000 கிலோ அளவிலான வெடிகுண்டுகளை சுமந்து சென்று 150 முதல் 500 கிலோமீட்டர் தொலைவுகளில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த ஏவுகணை அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது, நடுவானிலேயே தனது பாதையை இலக்கிற்கு ஏற்ப மாற்றி கொள்ளும் ஆற்றலும் கொண்டதாகும்.
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையானது ஏற்கனவே படையில் உள்ள பிருத்வி பலிஸ்டிக் ஏவுகணையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல் ஆகும்.
ப்ரளய் ஏவுகணையின் வெற்றியை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், DRDO தலைவர் சதீஷ் ரெட்டி ஆகியோர் விஞ்ஞானிகள் மற்றும் ராணுவத்தினருக்கு தங்களது வாழ்த்து மற்றும் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர்.