GPSஆல் வழிகாட்டப்படும் துல்லிய தாக்குதல் குண்டுகளை வாங்க உள்ள இந்திய தரைப்படை !!

இந்திய தரைப்படை 155 மில்லிமீட்டர் பிரங்கிகளில் இருந்து சுடக்கூடிய GPS உதவியுடன் வழி அறிந்து செல்லும் 1966 துல்லிய தாக்குதல் குண்டுகளை வாங்க விரும்புகிறது.

தற்போது இந்திய தரைப்படையின் ஆர்ட்டில்லரி ரெஜிமென்ட் அதாவது பிரங்கி படையில் இத்தகைய எந்த ஒரு குண்டும் பயன்படுத்தப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக தரைப்படை பயன்படுத்தி வரும் பிரங்கி குண்டுகளின் துல்லியம் சற்றே குறைவாகும். ஆனால் இந்த அதிநவீன குண்டுகள் மூலமாக இலக்கை தவிர வேறு எங்கும் சேதம் ஏற்படாத அளவுக்கு துல்லியமாக தாக்க முடியும்.

இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து GPS உதவியுடன் இயங்கும் எக்ஸ்காலிபர் குண்டுகள் குறைந்த எண்ணிக்கையில் வாங்கப்பட்டன. தற்போது மீண்டும் தேவை ஏற்பட்டுள்ளது.

மேலும் தரைப்படை அதிகாரிகள் ஆர்ட்டில்லரி ரெஜிமென்ட் பெருமளவில் 155 மில்லிமீட்டர் பிரங்கிகளை பயன்படுத்தும் வகையில் மாறி வருவதால் வருங்காலத்தில் தேவை அதிகரிக்கலாம் என்றனர்.

ஆகவே இந்திய நிறுவனங்கள் தேவைக்கேற்ப தேவையான தரத்துடன் குறைந்த காலத்தில் இத்தகைய குண்டுகளை தயாரிக்க முன்வந்தால் இந்தியாவிலேயே கொள்முதல் செய்யப்படும் எனவும் கூறினர்.