
இந்திய கடற்படையின் தற்போதைய தலைமை தளபதியாக இருப்பவர் அட்மிரல் கரம்பீர் சிங் ஆவார், வருகிற 30ஆம் தேதி இவர் ஒய்வு பெற உள்ளார்.
அதனை தொடர்ந்து இந்திய அரசு வைஸ் அட்மிரல் ஹரிகுமார் அவர்களை அடுத்த கடற்படை தலைமை தளபதியாக நியமித்து உத்தரவு பிறபித்துள்ளது.
இவர் வருகிற 30ஆம் தேதி தலைநகர் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் இந்தியாவின் 25ஆவது கடற்படை தளபதியாக பொறுப்பேற்று கொள்வார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர், தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 61ஆவது பேட்ச் மாணவராக இணைந்து பயிற்சி முடித்து 1983ஆம் ஆண்டு ஜனவரி 1 இந்திய கடற்படையில் சப் லெஃப்டினன்ட் ஆக இணைந்தார்.

தனது 38 வருட பணிக்காலத்தில் விராட், ரன்வீர், கோரா, நிஷாங்க் போன்ற முன்னனி போர் கப்பல்களை வழிநடத்தி உள்ளார், மேலும் பற்பல உயர் முக்கியத்துவம் கொண்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மும்பை பல்கலைக்கழகம் மற்றும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாதுகாப்பு தொடர்பான படிப்புகளை பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.