
இந்திய தரைப்படை தற்போது நவீனமயமாக்கல் திட்டத்தை அனைத்து மட்டத்திலும் செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில் தியேட்டர் கட்டளையக முறைக்கு படிப்படியாக மாறி வருகிறது.
தற்போது உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதும் லக்னோவை தளமாக கொண்ட மத்திய ராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சீன எல்லைக்கு பொறுப்பான நான்கு கட்டளையகங்களை குறைத்து மூன்று கட்டளையகங்களை மட்டுமே வைத்திருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மேலும் எதிர்காலத்தில் ஹிமாச்சல் பிரதேசம் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான மொத்த எல்லை பகுதியும் கிழக்கு தியேட்டர் கட்டளையகத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
தற்போது மத்திய ராணுவ தளபதியான லெஃப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.திம்ரி தலைமையிலான குழு ஒன்று இதற்கான ஆய்வு மற்றும் முதற்கட்ட பணிகளை துவங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர பஞ்சாப் முதல் குஜராத் வரையிலான பாகிஸ்தான் எல்லையோரம் மேற்கு தியேட்டர் கட்டளையகத்தின் கீழ் கொண்டு வரப்படும், இதற்கான பணிகள் தென்மேற்கு ராணுவ தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் அமர்தீப் சிங் பரிந்தர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்கள் மேற்கு அல்லது கிழக்கு என எந்த தியேட்டர் கட்டளையகங்களின் கீழும் வராது என அதிகாரிகள் தெரிவித்தனர்.