
விரைவில் ஐந்தாம் தலைமுறை ஆம்கா விமானத்திற்கான சோதனை வடிவத்தை உருவாக்கும் பணிக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளிக்க உள்ளது.
இதற்காக மத்திய அரசு சுமார் 15,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய உள்ளது, மேலும் இந்த சோதனை விமானத்தை வைத்து புதிய சக்திவாய்ந்த என்ஜினையும் சோதிக்க உள்ளனர்.
வருகிற 2022ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற உள்ள பாதுகாப்பு கண்காட்சியில் இந்த என்ஜினை தயாரிப்பதற்கான கூட்டாளியை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த சஃப்ரான் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ஆகிய உலகின் முன்னனி என்ஜின் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது ஆஃபரை அறிவித்துள்ளன.
இதன்படி சஃப்ரான் நிறுவனம் 69-110 கிலோநியுட்டன் ஆற்றலை வெளிப்படுத்தும் தனது எம்88-4 ரக என்ஜினை DRDO தயாரித்த ஃபேன் மற்றும் இதர பாகங்களுடன் இணைத்து தர முன்வந்துள்ளது.
இதற்காக சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய தரப்பிடம் கோரி உள்ளது மேலும் தனது பங்காக குறிப்பிட்ட அளவிலான பணத்தை முதலீடு செய்யவும் முன்வந்துள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமானது தனது யூரோஜெட் EJ-200 ரக என்ஜினை புதிய என்ஜின் தயாரிக்க பயன்படுத்தி கொள்ள முன்வந்துள்ளது, இதுவும் 69-110 கிலோநியுட்டன் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த புதிய என்ஜின் ஆம்கா மார்க்-2 மட்டுமின்றி தேஜாஸ் மார்க்-2 ஆகிய விமானங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது, தற்போது தேஜாஸில் பயன்படுத்தி வரப்படும் GE-F414 என்ஜினும் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.