
எந்தவொரு நாட்டின் பாதுகாப்பிற்கும் உளவுத்துறையும் அது அளிக்கும் தகவல்களும் மிக முக்கியமானவை. ஆனால் தகவல்கள் தவறாகவோ அல்லது தகவல்கள் கிடைக்கவே பெறாத நிலையில் பாதுகாப்பு திட்டங்கள் தடுமாறும்.
அத்தகைய ஒரு சிக்கலில் தான் தற்போது அமெரிக்கா சிக்கியிருப்பதாகவும் இது மூத்த அமெரிக்க அதிகாரிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நெருக்கமான வட்டாரங்களில் அமெரிக்க உளவுத்துறையால் ஊடுருவ முடியவில்லை எனவும் இதனால் மிக முக்கியமான சீனாவின் அடுத்தகட்ட நகர்வுகளை கணிப்பது கடினமாகிறது எனவும் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோசஃப் பைடன் ஆட்சிகளிலும் இது தொடர்வதாகவே பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
நாட்கள் செல்ல செல்ல சீனா ஒரு மிக கடினமான இலக்காக மாறி வருவதாகவும் அதிக ரகசியங்கள் கொண்ட நாடாக திகழ்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாண் போல்டன் கூறும்போது எனக்கு கிடைக்கும் உளவு தகவல்கள் ஒருபோதும் போதுமானதாக இருந்ததில்லை, ஒரு போதும் திருப்தி அடையவில்லை, பல ஆண்டுகளாக அமெரிக்க மனித உளவு திணறி வருவதாகவும் கூறினார்.
பல இன்னாள் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது இவையனைத்துமே அமெரிக்காவின் சீனா குறித்த திட்டமிடல்களை பாதித்துள்ளதாகவும் ஜி ஜின்பிங் அதிபராக பதவி ஏற்கும் முன்னரே அந்நாட்டு அரசு சீனாவில் உள்ள அமெரிக்க உளவு நெட்வொர்க்கை கடுமையாக சேதப்படுத்தியதாகவும் கூறுகின்றனர்.