
அதிகரித்து கொண்டே வரும் சீனாவின் ஆயுத ஏற்றுமதியால் இந்திய பிரதமரின் கனவு திட்டமான மேக் இன் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது சீனாவின் குறைந்த விலைலயிலான ஆயுதங்கள் மற்றும் அவற்றை விரைவாக தயாரிப்பதற்கான திறன்களால் சீனாவின் ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
சீனாவின் மூன்று ஆயுத நிறுவனங்கள் உலகின் 10 முன்னனி ஆயுத நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன, மேலும் சீனா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உள்ளது, அந்த வகையில் சுமார் 50 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது.
சீனா தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, ஆஃப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் உள்ள ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையிலும் சில நேரங்களில் கடனாகவும் ஆயுதங்களை விற்று பின்னர் அந்த நாடுகளை பொருளாதார ரீதியாக மடக்கி போடுகிறது.
ஆஃப்ரிக்காவில் எகிப்து, ஸாம்பியா, கானா, ஜிம்பாப்வே, நமீபியா,சூடான், அல்ஜீரியா, நைஜீரியா, அங்கோலா, கேமரூன், காங்கோ, கோட் டி ஐவரி, தெற்கு சூடான், சோமாலியா, தான்சானியா ஆகிய நாடுகளுக்கும்
ஆசியாவில் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கை மற்றும் நேபாளம் தென் அமெரிக்காவில் வெனிசுலா, பெரு, பொலிவியா கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளான பஹாமஸ், டரினிடாட் & டோபகோ, மெக்சிகோ, கயானா, பஹாமஸ், ஈக்வடார் போன்ற நாடுகள் சீன வாடிக்கையாளர்கள் ஆகும்.
இந்தியா சில வருடங்களுக்கு முன்னர் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தை துவக்கி தனியார் நிறுவனங்களின் பங்களிப்பையும் அதிகப்படுத்தியது. ஆனால் உள்நாட்டு தேவைக்கான உற்பத்தியில் கூட போதுமான இலக்கை அடையாத நிலையில் ஏற்றுமதியிலும் இந்தியா கோட்டை விடுகிறது.
ஆகவே இந்தியா அமெரிக்கா சீனா ரஷ்யா போன்ற நாடுகள் கோட்டை விடும் பகுதிகளில் தனது வேகத்தை அதிகபடுத்தி சர்வதேச அளவில் ஆயுத ஏற்றுமதியாளராக இடம்பிடிக்க தீவிர முயற்சி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.