இந்திய கடற்படையின் புதிய தளபதி அட்மிரல். ஹரிகுமார் தஞ்சாவூரில் பள்ளி கல்வி பயின்றவர் !!

இந்திய கடற்படையின் 25 ஆவது தலைமை தளபதியாக இன்று தலைநகர் தில்லியில் அட்மிரல். ராதாகிருஷ்ணன் ஹரிகுமார் பொறுப்பேற்று கொண்டார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் தமிழகத்தின் தஞ்சாவூர் சேக்ரட் ஹார்ட் கான்வென்டில் சில காலம் பயின்றுள்ளார், அவரது பள்ளி கல்விக்கு சிறந்த அடித்தளம் அங்கு கிடைத்ததாக அவரே கூறியுள்ளார்.

தந்தையின் பணி இட மாறுதலுக்கு பிறகு சொந்த ஊர் சென்று பள்ளி கல்வி முடித்துவிட்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தார்.

அங்கு மூன்று வருட அடிப்படை ராணுவ பயிற்சி மற்றும் பட்டப்படிப்பை முடித்த அவர் இந்த கடற்படை அகாடமியில் கடற்படை பயிற்சிக்காக இணைந்தார்.

அங்கு பயிற்சி நிறைவு செய்து 1983ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் அதிகாரியாக இணைந்தார். தனது 39 வருட பணிக்காலத்தில் ஐ.என்.எஸ்.விராட் விமானந்தாங்கி கப்பல், ஐ.என்.எஸ். ரன்வீர் நாசகாரி கப்பல், ஐ.என்.எஸ். கோரா கார்வெட் கப்பல் ஆகியவற்றை வழிநடத்தி உள்ளார்.

கடற்படை போர் கல்லூரியின் கட்டளை அதிகாரியாக, மேற்கு கடற்படையின் தலைமை நடவடிக்கைகள் அதிகாரியாக, தலைமை தாக்குதல் அதிகாரியாக, மேற்கு கடற்படையின் தளபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

செஷல்ஸ் நாட்டு அரசிற்கு கடற்படை ஆலோசகர், ஐ.நா பாதுகாப்பு படையில் பணி, பல்வேறு போர்க்கப்பல்களை படையில் இணைத்தது என முக்கிய கட்டங்களை தாண்டி வந்துள்ளார்.

மேலும் அமெரிக்க கடற்படையின் போர் கல்லூரி, இந்திய தரைப்படையின் போர் கல்லூரி, லன்டன் கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்பு சார்ந்த படிப்பில் முனைவர் பட்டம் ஆகியவற்றை முடித்தவர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

அவரது தாயார் திருமதி. விஜயலக்ஷமி ஆவர, அவரது மனைவி திருமதி. கலா நாயர் ஆவார் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.