
பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் பலர் சீன ராணுவத்தின் மேற்கு மற்றும் தென்னக கட்டளையகங்களில் தகவல்கள் பரிமாற்றத்திற்காக பணியமர்த்தப்பட்டு உள்ளனர என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் சீன ராணுவத்தின் மேற்கு கட்டளையகம் தான் இந்தியா உடனான எல்லை, ஸின்ஜியாங் மற்றும் திபெத் ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பான பிரிவு என்பதால் இந்தியா நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
சமீபத்தில் கிடைத்த தகவல்களின்படி பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த கர்னல் அந்தஸ்திலான அதிகாரிகள் சீன ராணுவத்தின் திட்டமிடும் பிரிவில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.
மேலும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வழக்கத்திற்கு மாறாக 10க்கும் அதிகமான ராணுவ அதிகாரிகள் ஆயுத கொள்முதலை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என தெரிகிறது.
இவை அனைத்துமே பாகிஸ்தான் மற்றும் சீனா இடையிலான உறவுகள் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளதையும் அது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதையும் உணர்த்துவதாக உள்ளது என்றால் மிகையல்ல.