
கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ரஞ்சித் சாகர் அணையில் தரைப்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
தரைப்படைக்கு சொந்தமான இந்த ரூத்ரா தாக்குதல் ஹெலிகாப்டரை இயக்கிய லெஃப்டினன்ட் கர்னல் அபித் சிங் பாத் மற்றும் கேப்டன் ஜெயந்த் ஜோஷி ஆகியோர் மரணத்தை தழுவினர்.
லெஃப்டினன்ட் கர்னல் அபித் சிங் அவர்களின் உடல் ஒரிரு நாட்களிலேயே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கேப்டன் ஜெயந்த் ஜோஷியின் உடல் கிடைக்கவில்லை.
இந்திய கடற்படையின் சிறப்பு டைவர்கள் குழு ஒரு பக்கம் தேட மற்றோரு புறம் அணையின் பிரமாண்ட பரப்பளவை மனதில் கொண்டு அதிநவன கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
பன்முனை சோனார், ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் ஆகியவை உதவியுடன் தேடும் பணி சுமார் 75 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவரது உடல் சுமார் 65 முதல் 70 மீட்டர் வரையிலான ஆழம் கொண்ட பகுதியில் கண்டுபிடிக்க பட்டுள்ளது.
மீட்கப்பட்ட அவரது உடல் பரிசோதனைகளுக்காக பதான்கோட் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதன் பிறகு இறுதி சடங்குகளுக்காக அவரது உடல் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.