மன்னார் வளைகுடா பகுதியில் 2 டன் கடல் வெள்ளரிகளை கைப்பற்றிய கடலோர காவல்படை !!

  • Tamil Defense
  • September 21, 2021
  • Comments Off on மன்னார் வளைகுடா பகுதியில் 2 டன் கடல் வெள்ளரிகளை கைப்பற்றிய கடலோர காவல்படை !!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே அமைந்துள்ள இந்திய கடலோர காவல்படை தளத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மன்னார் வளைகுடா பகுதியில் சோதனை நடைபெற்றது.

அதாவது ஒரு படகில் கடல் வெள்ளரிகள் கடத்தப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது, இதனையடுத்து ஹோவர்க்ராஃப்ட் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றது.

அப்போது தெற்கு வடலை பகுதியில் இருந்து கடலில் 15 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்த படகில் கடலோர காவல்படையினர் சோதனை நடத்தினர்.

அந்த படகில் சுமார் 200 சாக்குகளில் 2000 கிலோ எடையுள்ள கடல் வெள்ளரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 8 கோடி என கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.

தமிழகத்தின் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து கடத்தப்படும் இத்தகைய பொருட்கள் இலங்கை சென்று அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்கிறது.

அதிகமாக மருத்துவம் மற்றும் உணவாக உட்கொள்ளப்படும் இவை கடலின் சுற்றுசூழலுக்கு மிகவும் இன்றியமையாதது குறிப்பாக பவளப்பாறைகளின் வளர்ச்சியின் மூலமாக மீன்களின் பெருக்கத்துக்கு உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.