
இந்திய விமானப்படையின் தற்போதைய தலைமை தளபதியாக ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் குமார் பதவ்ரியா பணியாற்றி வருகிறார், இவர் வருகிற 30ஆம் தேதி ஒய்வு பெற உள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசு இந்திய விமானப்படைகக்கான அடுத்த தலைமை தளபதியாக தற்போது துணை தளபதியாக பதவி வகித்து வரும் ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுதிரியை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி இந்திய விமானப்படையில் சுமார் 39 வருடங்கள் பணியாற்றி உள்ளார், அவரது பணிக்காலத்தில் மிக-21, மிக்-23, மிக்-29 மற்றும் சு30 ஆகிய போர் விமானங்களில் 3800 மணி நேரம் பறந்த அனுபவத்தை பெற்றுள்ளார்.
மேலும் அவர் ஊட்டி வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகள் பணியாளர்கள் கல்லூரி மற்றும் ஜாம்பியா நாட்டின் பாதுகாப்பு பணியாளர்கள் உயர் கல்லூரி ஆகியவற்றில் பயிற்றுனராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு நீதா சவுதிரி என்ற மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர், ஒய்வு பெற உள்ள ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் என்பது கூடுதல் தகவல்.