தாலிபன்களுடன் இந்தியா சார்பில் முதல் சந்திப்பு

தாலிபன்களின் வேண்டுகோளின் படி இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் அவர்கள் கத்தாரில் தாலிபன்களின் அரசியல் பிரிவு தலைவர் செர் முகமது அப்பாஸ் என்பவரை சந்தித்து பேசியுள்ளார்.

இதற்கு முன்பு நிறைய முறை இந்தியா சார்பில் தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் தாலிபன்களின் அழைப்பின் பேரில் வெளியுறவு அமைச்சகம் சந்தித்து பேசியுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

பாதுகாப்பு மற்றும் இந்தியர்கள் மீட்பு குறித்து பேசப்பட்டாலும் ஆப்கன் மண்ணை இந்தியாவிற்கு எதிராக எந்த பயங்கரவாத கூட்டமும் உபயோகிக்க கூடாது என்பதை அழுத்தமாக இந்தியா இந்த சந்திப்பில் பதிவு செய்துள்ளது.

தற்போது 140 இந்தியர்கள் இன்னும் ஆப்கனில் உள்ளனர்.இந்தியா இதுவரை 112 ஆப்கானியர்கள் உட்பட 565 பேரை இந்தியாவிற்கு மீட்டு வந்துள்ளது.இந்த சேர் முகமது அப்பாஸ் நமது இந்தியன் மிலிட்டரி அகாடமியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடைய பிரச்சனை அனைத்தும் சுமூகமாக கையாளப்படும் என தாலிபன்கள் உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.தாலிபன்களுடன் சேர்ந்த மற்றொரு பயங்கரவாத பிரிவான ஹக்கானி நெட்வொர்க் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.2008-09 இந்த அமைப்பு இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்தியதில் 75 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.