
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் முறையாக மிகப்பெரிய அளவிலான ராணுவ சீர்த்தருத்தங்களை நோக்கி முப்படைகளும் நகர்ந்து வருகின்றன.
இதற்கான முழு முதல் பொறுப்பும் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது, அவரது தலைமையிலான ராணுவ விவகாரங்கள் துறை இதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் எதிர்காலத்தில் இந்திய ராணுவம் எப்படி இயங்கும் என்பதை தெரிவித்தார்.
தற்போது சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு பொறுப்பாக சுமார் 17 முப்படை கட்டளையகங்கள் உள்ளன, இனி மேல் வெறுமனே 6 கட்டளையகங்கள் தான் இருக்கும் என்றார்.
பாகிஸ்தான் எல்லைக்கு பொறுப்பாக மேற்கு தியேட்டர் கட்டளையகம், சீன எல்லைக்கு பொறுப்பாக கிழக்கு தியேட்டர் கட்டளையகம் என இரண்டு கட்டளையகங்களும்,
இந்திய கடற்படையின் மேற்கு கிழக்கு மற்றும் தெற்கு கட்டளையகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய பெருங்கடல் தேசிய கடல்சார் கட்டளையகம் உருவாக்கப்படும்.
மேலும் இந்திய வான்பரப்பை பாதுகாக்க ஆளில்லா விமானங்கள் செயற்கைகோள்கள், ஏவுகணைகள் ஆகிய தளவாடங்கள் அடங்கிய வான் பாதுகாப்பு கட்டளையகம் ஒன்றும்
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுகளை பாதுகாக்கும் வகையில் மற்றொரு கட்டளையகமும் உருவாக்கப்படும் எனவும்
கடைசியாக சைபர் போர்முறை சார்ந்த ஒரு சிறப்பு கட்டளையகமும் உருவாக்கப்படும் எனவும் ஜெனரல் ராவத் தெரிவித்தார்.
இந்த கட்டளையகங்களை ஏதேனும் ஒர் படையை சேர்ந்த அனுபவம் மிக்க அதிகாரி வழிநடத்துவார் அவருக்கு உதவியாக மற்ற இரு படைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்களது படை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் துணை ராணுவ படைகளை குறிப்பாக எல்லையோர காவல் பணிகளை மேற்கொள்ளும் படையணிகளுடனான செயல்பாடுகளை அதிகப்படுத்தவும் உள்ளதாக அவர் கூறினார்.