அடுத்த ஆண்டிற்கான மெகா ஒப்பந்தங்கள் ஒரு பார்வை !!
அடுத்த ஆண்டு அல்லது அதற்கு முன்னரே இந்தியாவின் கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கான மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப்படைக்கு அடுத்த கட்டமாக 36 எஃப்4 ரக ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் இவை தற்போது வாங்கப்பட்ட எஃப்3 ரக ரஃபேல விமானங்களை விட நவீனமானது எனவும் இறுதி செய்யப்பட்டால் 2026ஆம் ஆண்டு டெலிவரி துவங்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்திய விமானப்படை கூடுதலாக 6 சி130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களை வாங்கவும் விரும்புகிறது இவற்றை ஆளில்லா விமானங்களை ஏவ பயன்படுத்தி கொள்ள விமானப்படை விரும்புகிறது.
ஏற்கனவே 12 சி130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்கள் படையில் உள்ள நிலையில் கூடுதல் விமானங்களுக்கான பேச்சுவார்த்தை லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடன் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை தவிர்த்து இரண்டு இஸ்டார் அமைப்பு பொருத்தப்பட்ட பாம்பர்டியர் க்ளோபல் எக்ஸ்பிரஸ் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது, இந்த விமானங்கள் உளவு கண்காணிப்பு டார்கெட்டிங் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
இந்திய கடற்படையும் தனது பங்குக்கு கூடுதலாக 6 போயிங் பி8ஐ பொசைடான் தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்களை வாங்க விரும்புகிறது ஏற்கனவே படையில் இத்தகைய 10 விமானங்கள் உள்ளதும் அவற்றை விட இவை அதிநவீனமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மெகா ஒப்பந்தங்களின் ஒட்டுமொத்த மதிப்பு தோராயமாக சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பை பெறும் என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.