
இந்திய கடற்படையின் கப்பல்களில் பயன்படுத்தக்கூடிய வகையிலான வால் பகுதியை மடக்கி கொள்ளும் வகையிலான அதிநவீன இலகுரக ஹெலிகாப்டரின் சோதனை ஓட்டம் துவங்கி உள்ளது.
இந்த முதல்கட்ட சோதனைகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் எனவும், பின்னர் கப்பல்களில் இருந்து இயங்கும் சோதனைகள் அடுத்த கட்டமாக நடைபெறும் எனவும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது வால்பகுதி மற்றும் ரோட்டார் பிளேடுகளை மடக்கிய பின்னர் 13.5 மீட்டர் நீளம், 3.5 மீட்டர் நீளம் மற்றும் 4.1 மீட்டர் உயரம் என்ற அளவீடுகளை கொண்டுள்ளது.
இந்த அளவீடுகள் ஏற்கனவே இந்திய கடற்படை 111 கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்களுக்கு வைத்திருந்த அளவீடுகளுடன் ஒத்து போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே கடற்படை பல பத்தாண்டுகளாக பயன்படுத்தி வரும் ஃபிரெஞ்சு சேத்தக் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக படையில் இணைக்கப்பட உள்ளன.
மேலும் இவை தேடுதல் மற்றும் மீட்பு, கடலில் காயம் அடைந்தோர் நோய்வாய்பட்டோரை மீட்டல் மற்றும் குறைந்த தீவிரத்தன்மை கொண்டு கடல்சார் ஆபரேஷன்கள் போன்ற பணிகளில் பயன்படுத்தி கொள்ளப்படும் என கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.