நாங்கள் கோழைகள் அல்ல ; இந்தியாவில் பயிற்சி பெற்ற ஆப்கன் வீரர்

  • Tamil Defense
  • August 18, 2021
  • Comments Off on நாங்கள் கோழைகள் அல்ல ; இந்தியாவில் பயிற்சி பெற்ற ஆப்கன் வீரர்

காபூல் இவ்வளவு குறைந்த காலத்தில் தாலிபன்களின் கையில் விழும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல எனவும் இந்திய மிலிட்டரி அகாடமியில் பயிற்சி பெற்ற ஆப்கன் நாட்டு இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

“என்னை நம்புங்கள், எங்கள் இராணுவம் வலிமையானது.தாலிபன்கள் எங்களை வீழ்த்தும் அளவுக்கு பலமானவர்கள் அல்லர்.அரசியல்வாதிகள் தான் எங்களை விற்றுவிட்டனர்.நாட்டுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த எங்கள் தியாகங்களை விற்றுவிட்டனர்” என அவர் கூறியுள்ளார்.

“சில நாட்களுக்கு முன் எங்களின் தளத்தை தாலிபன்கள் தாக்கியபோது எங்கள் கமாண்டிங் அதிகாரி மற்றும் அரசியல்வாதிகள் எங்களை திருப்பி தாக்க அனுமதிக்கவில்லை.அது அமைதிப் பேச்சுவார்த்தையை பாதிக்கும் என அவர்கள் கூறினர்.இதன் பிறகு தாலிபன்கள் எங்களின் முக்கிய தளங்களை அனைத்தையும் கைப்பற்றினர்” என அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தற்போது பதுங்கி வாழும் அந்த அதிகாரி கடந்த ஞாயிறு முதல் தான் எதுவுமே சாப்பிடவில்லை எனவும் தூங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.என்னுடைய பெற்றோர்களை நினைத்தால் கவலையாக உள்ளது எனவும் அவர்கள் காபூலில் தனிமையில் வசித்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.தன்னிடம் சாப்பிட எதுவுமே இல்லை எனவும் கூறியுள்ளார்.

தனது தந்தை குறித்து தாலிபன்களுக்கு தெரியும் என அவர் கூறியுள்ளார்.எல்லாம் அவசரமாக நடைபெற்றதால் என்னால் உணவுப் பொருள்களை சேகரிக்க இயலவில்லை.ஆனால் நான் இந்தியாவில் பயிற்சி பெற்றதால் பிழைத்திருக்க என்னால் முடியும் என அந்த அதிகாரி கூறியுள்ளார்.