ஆஃப்கானிஸ்தானுக்கு விமானப்படை மூலம் 80 டன் பிரங்கி குண்டுகளை அனுப்பி வைத்த இந்தியா !!

இந்தியா சமீபத்தில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து 50 தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை விமானப்படையை கொண்டு மீட்ட சம்பவம் செய்திகளில் முக்கிய இடம்பிடித்த நிலையில் மற்றொரு சம்பவம் சத்தமின்றி நடந்துள்ளது.

அதாவது இந்தியா தனது விமானப்படை மீட்பு பணிகளுக்கு பயன்படுத்திய அதே இரண்டு சி130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்கள் மூலமாக ஆயுதங்களையும் டெலிவரி செய்துள்ளது.

அதாவது கந்தஹார் நகரில் 10ஆம் தேதி தரை இறங்கிய விமானங்கள் ஆயுதங்களை டெலிவரி செய்துவிட்டு அடுத்த நாள் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஏற்றி கொண்டு இந்தியா புறப்பட்டன.

இதனையடுத்து அன்றைய தினமே ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தளத்தில் தரை இறங்கிய மற்றொரு இந்திய சி17 க்ளோப்மாஸ்டர் விமானம் 40 டன் ஆயுதங்களை டெலிவரி செய்துள்ளது.

ஆக இதுவரை மொத்தமாக அதாவது வெளி உலகிற்கு தெரிந்த வகையில் சுமார் 80 டன் அளவிலான 122 மில்லிமீட்டர் பிரங்கி குண்டுகளை ஆஃப்கானிஸ்தான் தரைப்படைக்கு இந்தியா வழங்கியுள்ளது.

இந்த குண்டுகளை ஆஃப்கானிஸ்தான் தரைப்படை தனது 122 மில்லிமீட்டர் பிரங்கிகளில் இருந்து தாலிபான்களுக்கு எதிராக பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.