டி90, டி72 டாங்கிகளுக்கு குட்பை, 1700 புதிய டாங்கிகளை நோக்கி நகரும் ராணுவம் !!

  • Tamil Defense
  • June 5, 2021
  • Comments Off on டி90, டி72 டாங்கிகளுக்கு குட்பை, 1700 புதிய டாங்கிகளை நோக்கி நகரும் ராணுவம் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அதிநவீன எதிர்கால டாங்கிகளுக்கான தகவல் அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது, இந்த டாங்கிகள் சமகால அதிநவீன டாங்கிகளை எதிர்கொள்ளும் வகையிலும் தற்போது பயன்பாட்டில் உள்ள டி72 மற்றும் டி90 ஆகியவற்றுக்கு மாற்றாகவும் இருத்தல் அவசியம்.

FRCV – FUTURE READY COMBAT VEHICLE என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் நிபந்தனைகள் படி இந்த டாங்கிகள் சுயசிந்தனை திறன் கொண்ட தாக்குதல் கட்டுபாட்டு அமைப்பு, அதிக தானியங்கி அமைப்புகளுடன் டாங்கி குழுவினர் மூவருக்கு மேல் செல்லாமல் இருக்கும் வகையில் வடிவமைப்பு இருக்க வேண்டும்,

மேலும் டாங்கியின் உள்ளிருந்து நான்கு திசையிலும் பார்க்க முடியும் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம், அகச்சிவப்பு கதிர் அமைப்புகளில் சிக்காத வகையிலும் இந்தியாவின் எந்த பகுதியிலும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இருத்தல் வேண்டும்.

அது தவிர இந்த டாங்கியானது ஒரு டன்னுக்கு 30 குதிரை சக்தி திறனை வெளிபடுத்தும் என்ஜினை கொண்டிருக்க வேண்டும் என்பதும் நிபந்தனை ஆகும், டி90ல் இது டன்னுக்கு 24 குதிரை சக்தி என்பதும், அர்ஜூனில் டன்னுக்கு 21 குதிரை சக்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் அறியும் அறிவிக்கை ஃபிரெஞ்சு லெக்லர்க், ரஷ்ய T-14 அர்மாட்டா, தென்கொரிய K1 , அமெரிக்க M1AX ஏப்ரம்ஸ், ஜெர்மானிய லெப்பர்ட், உக்ரைனின் T-84 ஒப்லாட், இத்தாலிய ஏரியட், செர்பிய M-84, இஸ்ரேலிய மெர்காவா, இங்கிலாந்தின் சேலஞ்சர், துருக்கியின் அட்லேய் ஆகிய டாங்கிகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் நமது DRDO க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்க மற்றும் ஜெர்மன் டாங்கிகளை அதிக எடை காரணமாக நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ள அதே நேரத்தில் ரஷ்ய , ஃபிரெஞ்சு, தென்கொரிய மற்றும் உக்ரைனிய டாங்கிகள் மீது தரைப்படை அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

தேர்வு செய்யப்படும் டாங்கி தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் சுமார் 1700 டாங்கிகளை இந்தியாவிலேயே தயாரித்து வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.