கேப்டன் அமோல் காலியா

சேவை எண் : Ic- 54065F

பிறந்த தினம் : பிப்ரவரி 26, 1974

இடம்: நங்கள்,ஹிமாச்சல்

சேவை : இராணுவம்

தரம் : கேப்டன்

சேவை காலம்: 1994-1999

பிரிவு : 12வது பட்டாலியன்

ரெஜிமென்ட் : ஜம்மு காஷ்மீர் லைட் இன்பாட்ரி

விருது : வீர் சக்ரா

வீரமரணம் : ஜீன் 9, 1999

கேப்டன் அமோர் காலியா 26 பிப்ரவரி, 1974ல் ஹிமாச்சலின் உனா மாவட்டத்தில் உள்ள நங்கள் எனும் பகுதியில் பிறந்தார்.பொறியியல் தேர்வு எழுதி வெற்றிபெற்றார் எனினும் அவருக்கு தேச சேவையே பிடித்திருந்தது.1994ல் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தார்.

சத்பால் சர்மா மற்றும் உஷா அவர்களுக்கு மகனாக பிறந்த அமோல் காலியாவிற்கு ,அமன் காலியா என்ற சகோதரரும் உள்ளார்.அவர் விமானப்படையில் பணியாற்றுகிறார்.இன்று நங்கள் பகுதியில் வசிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் அமோல் காலியா தான் முன்னோடி.
 
கார்கில் யுத்தம்

கார்கில் போரின் போது கேப்டன் அமோல் அவர்களின் படைப் பிரிவிற்கு பாயின்ட் 5203 என்ற மலையை கைப்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த மலை 17000அடி உயரம்.காஷ்மீர்-யால்டோர் பகுதியில் அந்த மலை அமைந்திருந்தது.அந்த மலையை மீட்பது ஆபத்தான ஒன்று தான்.ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்த மலையாக அது இருந்தது.இதை மீட்டால் தான் நம்மால் படாலிக் பகுதியை மீட்க முடியும் என்ற நிலை.

மலை யுத்தத்தில் பயிற்சி பெற்ற கேப்டன் அமோல் மற்றும் 13வீரர்கள் குழு அந்த மலைப் பகுதிக்கு விமானம் வழியாக அனுப்பப்பட்டனர்.விமானத்தில் இருந்து குதித்து மலைப் பகுதியை அடைந்திருந்தனர்.மலை முகட்டை அடைவது சிரமமாக இருந்தது.24 மணி நேர சண்டை தொடங்கியது.நாம் சுடுவது அவர்களை பாதிக்கா வண்ணம் பதுங்கி இருந்தனர்.ஆனால் அவர்களால் நம்மை எளிதாக சுட முடிந்தது.மலைப் போர் பயிற்சியில் தாங்கள் பெற்ற பயிற்சி யுத்திகள் வழியாக மலைமுகட்டை அடைந்தனர்.

அதிகாலை 3மணி.மொத்த இந்தியாவும் ஆழ் உறக்கத்தில் இருந்த நேரம்.மூன்று மணிக்கு தாக்குதலை தொடங்கினர்.ஜீன் 8 அன்று வீரர்கள் முன்னேறுவது தடைபட்டது.நம் வீரர்களால் இருளில் எதையும் பார்க்க முடியவில்லை.பாகிஸ்தானியர் ஒன்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியிருந்தனர்.ஜீன் 8 அன்று அதிகாலையிலே பாகிஸ்தானியர் மறுதாக்குதல் நடத்தினர். இதில் நம் படை இலகுரக துப்பாக்கி இயக்கும் வீரரை இழந்தது.கேப்டன் அமோல் அந்த இலகுரக துப்பாக்கியை எடுத்து எதிரிகள் மீது குண்டு மழை பொழிந்தார்.மூன்று பாக் வீரர்கள் கொல்லப்பட மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.எதிரிகள் அதிக பேர் இருந்தனர்.இந்த சண்டையில் கேப்டன் அமோல் மீது சில குண்டடி விழுந்தது.அப்போது காலை 9மணி.கேப்டன் விடாமல் போரிட்டார்.குண்டு காயத்தால் அதிக அளவு இரத்தம் வெளியேறி பின்பு அவர் வீரச்சாவை தழுவினார்.அன்றைய தினம் நமது இராணுவம் கேப்டன் அமோல் மற்றும் 12 மற்ற இராணுவ வீரர்களை இழந்தது.படாலிக் செக்டார் மீட்பில் கேப்டன் மற்றும் அந்த வீரர்களின் பங்கு மறுக்க முடியாத ஒன்று.

கேப்டன் தனது வீரர்களை உற்சாகப்படுத்தி முன்னின்று போராடியது மட்டுமல்லாமல் எதிரிகள் அதிக அளவில் இருந்தும் சோர்வடையாமல் இருந்த வீரர்களை கொண்டு வீரத்துடன் எதிரிகளை எதிர்த்தார் என அவரது சக வீரர் ஹவில்தார் சுதிஸ் குமார் கூறுகிறார்.12 நாட்களாக கேப்டன் அமோல் அவர்களின் உடலை மீட்க முடியாமல் போனது.காரணம் பாகிஸ்தானிகள் நேரடியாக மோர்ட்டார்கள் கொண்டு அந்த மலைப் பகுதியை தாக்கி கொண்டே இருந்தனர்.ஜீன் 20 அன்று அவரது திருவுடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் கடைசியாக எழுதிய கடிதம் ஜீன் 9 அன்று அவரது குடும்பத்தாரிடம் சென்றது அதில் அவர் கூறிய வார்த்தைகள் “என்னை பற்றி கவலை வேண்டாம்.இந்த மாத இறுதியில் நான் டெல்லிக்கு வருவேன் என நம்புகிறேன்.நீங்கள் அவரசப்படுத்துவதால் ,வந்த பின் எனது திருமணத்தை நிச்சயிக்கலாம் “

வீரவணக்கம் வீரர்களே.