கல்வான் தாக்குதலின் ஒரு வருடம் நிறைவு; அங்கு தற்போதைய நிலை என்ன?

  • Tamil Defense
  • June 15, 2021
  • Comments Off on கல்வான் தாக்குதலின் ஒரு வருடம் நிறைவு; அங்கு தற்போதைய நிலை என்ன?

இந்தியா சீனா எல்லை மோதலின் உச்சமாக கடந்த வருடம் இதே நாளன்று இரு நாட்டு படை வீரர்களும் மோதிக்கொண்டனர்.ஒரு வருடத்திற்கு பிறகு தற்போதும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

தற்போது இந்தியா சீன எல்லைக்கு அருகே இரு ஸ்ட்ரைக் கோர் படைப் பிரிவுகளை நிறுத்தியுள்ளது.அதிக கவனம் பெறும் பகுதிகளான சிக்கிம் மற்றும் அருணாச்சல் ஆகிய பகுதிகளில் மேலதிக படைப்பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளன.

சீனா மீது நம்பிக்கையில்லாமல் லடாக் பகுதியில் மட்டும் 50000 படைவீரர்களை மேலதிகமாக இந்தியா குவித்துள்ளது.உரசல் ஏற்படும் பகுதிகளில் இன்னும் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.பனிகாலத்தில் வீரர்கள் பின்வாங்கப்பட்டாலும் தற்போது மீண்டும் உரசல் ஏற்பட்ட பகுதிகளுக்கு வீரர்கள் மறுபணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும் சீனாவும் தனது போர்பயிற்சிகளை திபத் பகுதியில் தொடர்ந்து நடத்தி வருகிறது.

கிழக்கு லடாக்கை ஒட்டியுள்ள பகுதிகளில் சீனா தனது இராணுவ தளங்களையும் விமான தளங்களையும் நவீனப்படுத்தியுள்ளது.மேலும் எல்லையை ஒட்டிய பகுதிகளில் வீரர்களுக்கான நிரந்த பங்கர்கள் போன்ற கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட சீனாவுக்கு எதிரான சம அளவு இந்தியாவும் தனது பலத்தை எல்லைப்பகுதிகளில் அதிகரித்துள்ளது.மோதல் போக்கு ஏற்படுமாயின் மேலதிக வீரர்களை உடனடியாக அனுப்பும் வசதியும் இந்தியாவிடம் உள்ளது.

கிழக்கு லடாக் மட்டுமல்லாமல் சிக்கிம் மற்றும் வடகிழக்குபகுதியில் புதிய மோதல் முனைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.இந்திய இராணுவத்தின் முதல் தாக்கும் படைப்பிரிவு பாக்கிற்கு எதிராகவே எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும்.அது தற்போது சீனாவையும் கண்காணித்து வருகிறது.அது போல இராணுவத்தின் 17வது மலையக தாக்கும் பிரிவு வடகிழக்கு பகுதிக்கு பொறுப்பாக உள்ளது.

சிக்கிமில் ஏற்கனவே உள்ள கவச வாகனப்படைப்பிரிவுடன் புதிய முதன்மை கவச போர் டேங்குகளை கொண்ட படைப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.பயங்கரவாத தடுப்பு பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அஸ்ஸாம் ரைபிள்ஸ் பட்டாலியன்கள் தற்போது சீன எல்லையின் இரண்டாம் நிலை பாதுகாப்பு அரணாக நிறுத்தப்பட்டுள்ளனர்.