புதிய நேத்ரா விமானங்களை வாங்க திட்டமிடும் இந்திய விமானப்படை

விமானப்படையின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவிற்கு பின்பு பேசிய விமானப்படை தளபதி ஏர்சீப் மார்சல் பதாரியா அவர்கள் ERJ145 விமானத்தை அடிப்படையாக கொண்டு டிஆர்டிஓ மேம்படுத்திய அவாக்ஸ் ரேடார் கொண்ட நேத்ரா விமானங்கள் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

பாக் மற்றும் சீனா என இருமுனை அச்சுறுத்தல் இருப்பதால் அவாக்ஸ் விமானங்களின் தேவை அதிகமாக உள்ளது.டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள ஏஇஎஸ்ஏ ரேடார் கொண்டு ஏர் இந்தியா வசம் உள்ள ஆறு ஏர்பஸ் ஏ320 விமானங்களை அவாக்ஸ் விமானங்களாக மாற்றும் திட்டமும் உள்ளதாக தளபதி கூறியுள்ளார்.

பிரேசிலின் ERJ145 விமானங்களை அடிப்படையாக கொண்ட மூன்று நேத்ரா விமானங்கள் தற்போது இந்தியாவிடம் உள்ளது.அதில் இரு விமானங்கள் விமானப்படையிடமும் ஒரு விமானம் டிஆர்டிஓ-விடமும் உள்ளது.

பிரேசிலின் எம்பரேயர் விமான நிறுவனத்திடம் இருந்து தான் ERJ145 விமானங்கள் வாங்கப்பட்டு அதில் டிஆர்டிஓ மேம்படுத்திய ரேடார் பொருத்தப்பட்டு நேத்ரா விமானங்கள் உருவாக்கப்பட்டன.ஆனால் பின்னாளில் எம்பரேயர் விமான நிறுவனம் ஊழல் புகாரில் சிக்கிய போது அதனிடம் இருந்து விமானம் வாங்குதல் நிறுத்தப்பட்டது.தற்போது அந்நிறுவனத்திடம் இருந்து உதிரிபாகங்கள் மட்டுமே பெறப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.