
சமீபத்தில் தலைநகர் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் ஆளுனர் மனோஜ் சின்ஹா மற்றும் அரசு அதிகாரிகள் சந்தித்து ஜம்மு காஷ்மீர் குறித்து விவாதித்தனர்.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் நிர்வாக வசதிக்காக ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய தகவல்கள் வெளிவர துவங்கியதும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாஹித் ஹஃபீஸ் சவுதிரி செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் ஜம்மு காஷ்மீரில் இந்தியாவின் எந்தவித நடவடிக்கையும் செல்லாது அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனவும் இந்தியாவின் ஒரு தலைபட்சமான நடவடிக்கைகளை சர்வதேச சமுகம் கண்டிக்க வேண்டும் எனவும்,
ஐக்கிய நாடுகள் சபை, உலக அரசுகள் ஆகியவை இந்தியாவை கண்டிக்க முன்வர வேண்டும் எனவும் கூறிவிட்டு காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் எப்போதும் உறுதணையாக இருக்கும் என அவர் பேசியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு சட்டசபைகள் இல்லாத யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைத்தது குறிப்பிடத்தக்கது.