கல்வானுக்கு பிறகு கடலில் சீனாவை எதிர்கொள்ள தயாராகும் இந்தியா !!

கடந்த வருடம் கல்வான் பள்ளதாக்கில் நடைபெற்ற மிக கொடுரமான மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 40க்கும் அதிகமான வீரர்கள் வீரமரணத்தை தழுவினர், இதன் பின்னர் நில எல்லைகளில் பலத்த படைகுவிப்பு நடைபெற்று உள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா இடையிலான மற்றொரு முக்கிய விஷயம் இந்திய பெருங்கடல் பகுதி மிக நீண்ட கிலமாகவே சீனா தனது பொருளாதாரத்திற்கு இந்திய பெருங்கடலை நாடி இருக்க வேண்டிய சூழல் உள்ளது இதனை நன்கு உணர்ந்த சீனா தனது காய்களை வேகமாக நகர்த்தி வருகிறது.

இந்திய பெருங்கடல் பகுதியில் ராணுவ தளங்கள், துறைமுக குத்தகை கட்டுமானம் என இன்னபிற பல்வேறு முதலீடுகளை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது அந்த வகையில் பாகிஸ்தான் இலங்கை ஈரான் மியான்மர் வங்கதேசம் தான்சானியா ஜிபூட்டி என ஒரு பட்டியலே உள்ளது.

மேலும் இந்த துறைமுகங்களையும் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளையும் சாக்காக வைத்து கொண்டு சீனா தனது நாசகாரி போர் கப்பல்கள் முதலாக அணுசக்தி நீர்மூழ்கிகள் வரை இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து மேற்கொள்ள அனுப்பி வைக்கிறது போதாக்குறைக்கு தனது கடலடி ஆய்வு கப்பல்களை அனுப்பி இந்திய பெருங்கடலின் கடல்பகுதிகளை ஆய்வு செய்து தகவல் சேகரிக்கவும் முற்படுகிறது.

இந்த நிலையில் எதிர்காலத்தில் வரவிருக்கும் பேராபத்தை இந்தியா உணர்ந்து கொண்டு காய் நகர்த்த துவங்கி உள்ளது ஆனால் இந்த வேகம் நமக்கு நிச்சயமாக போதாது அதற்கான காரணங்களை கீழே பார்க்கலாம்.

இந்திய கடற்படையில் தற்போது 1 விமானந்தாங்கி, 2 அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகள், 10 நாசகாரிகள், 13 ஃப்ரிகேட்கள், 17 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகள், 23 கார்வெட் கப்பல்கள் படையில் உள்ளன.

அதுவே சீன கடற்படையின் தென்கடல் படைப்பிரிவில் மட்டுமே 1 விமானந்தாங்கி கப்பல், 11 நாசகாரிகள், 17 ஃப்ரிகேட்கள், 12 கார்வெட்கள், 8 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகள் உள்ளன, மேலும் தேவைப்பட்டால் தனது வடக்கு மற்றும் கிழக்கு படைப்பிரிவு கப்பல்களையும் களமிறக்க முடியும்.

அதை போல சீனா கடற்படை நவீனப்படுத்துதல் மற்றும் விரிவாக்கத்தில் அசத்தி வருகிறது, வருடா வருடம் கப்பல்களை கட்டி குவித்து வருகிறது சமீபத்தில் ஒரே நாளில் 1 க்ருஸர்,1 அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கி மற்றும் 1 நிலநீர் போர்முறை கப்பல் ஆகியவற்றை சீன அதிபர் ஜி ஜின்பிங் படையில் இணைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கடந்த 2009ஆம் ஆண்டு ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை கட்ட தொடங்கியது தற்போது 2021 ஆனால் இன்று வரை அக்கப்பல் படையில் இணையவில்லை, நமக்கு பின்னர் விமானந்தாங்கி கப்பல் கட்டுமானத்தில் முழு வீச்சில் இறங்கிய சீனா தற்போது இரண்டை படையில் சேர்த்துவிட்டு மூன்றாவதாக சூப்பர் கேரியரை கட்டி வருகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இனி இந்திய கடற்படையின் எதிர்கால திட்டங்கள் குறித்து பார்க்கலாம், தற்போதைய நிலையில் மேலும் 2 அரிஹந்த் ரக அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகள் மற்றும் 3 மிகப்பெரிய (அமெரிக்க வெர்ஜீனியா கப்பல்களுக்கு இணையான) எஸ்-5 ரக நீர்மூழ்கி கப்பல்களை படையில் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

மேலும் 6 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும், 6 புதிய டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகள் கப்பல்களை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் உள்நாட்டில் கட்டவும், இதற்கு இடையே ரஷ்யாவிடம் இருந்து 1 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கியை குத்தகைக்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

7 நீலகிரி ரக ஸ்டெல்த் ஃப்ளஷ்டெக் ஃப்ரிகேட் கப்பல்கள்,4 அட்மிரல் க்ரிகோரோவிச் ரக ஃப்ரிகேட் கப்பல்கள் 2030ஆம் ஆண்டுக்கு முன்னர் படையில் இணையும் என கூறப்படுகிறது மேலும் இந்திய கடற்படை ஐ.என்.எஸ் விஷால் என்ற மூன்றாவது விமானந்தாங்கி கப்பலை பெறவும் தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை தவிர்த்தை இந்திய பெருங்கடல் பகுதியில் செஷல்ஸ், மாரிஷியஸ், சிங்கப்பூர், ஒமன் போன்ற நாடுகளிலும் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் இந்திய கடற்படை தனது தளங்கள் அமைப்பது, துறைமுக பயன்பாட்டு உரிமைகள் பெறுவது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வளவு செய்தாலும் சீனாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க நாம் இனியும் வேகமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியாக வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.