மேலும் 108 ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதித்து உத்தரவு !!

  • Tamil Defense
  • June 3, 2021
  • Comments Off on மேலும் 108 ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதித்து உத்தரவு !!

உள்நாட்டு தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மேலும் 108 ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி தடை பட்டியலில் சேர்த்து பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறபித்து உள்ளது.

இதே போன்று இதற்கு முன் ஒரு முறை தடை பட்டியல் வெளியானது, தற்போதைய பட்டியலில் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் உள்ளவை சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பட்டியலில் அடுத்த தலைமுறை கார்வெட் கப்பல்கள், ஏவாக்ஸ் அமைப்புகள், நடுத்தர ரேடார்கள், இடைத்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள்,

ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், போர்க்கள கண்காணிப்பு ரேடார்கள், கண்ணிவெடி பாதுகாப்பு கவச வாகனங்கள், நவீன உலோக எதிர்ப்பு துப்பாக்கிகள் போன்றவை அடங்கும் என பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டாம் தடை பட்டியலானது வருகிற டிசம்பர் மாதம் முதல் 2025 டிசம்பர் வரை படிப்படியாக அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

இந்த இரண்டாம் தடை பட்டியலில் அதிகமாக முக்கிய தளவாடங்கள் இடம்பெறவில்லை மாறாக அவை 101 தளவாடங்கள் அடங்கிய முதல் தடை பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த தடை பட்டியலின் வெளியீடு இந்திய உற்பத்தியாளர்கள் மீதான அரசின் நம்பிக்கையை காட்டுவதாக இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர் ஜெயந்த் தமாதர் பாட்டீல் தெரிவித்தார்.