கடலில் மூழ்கிய ஈரான் நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பல்

  • NoCallSign
  • June 4, 2021
  • Comments Off on கடலில் மூழ்கிய ஈரான் நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பல்

இரு நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டு கப்பல் படையின் மிகப்பெரிய போர் கப்பலான கர்க் தீப்பிடித்து எரிந்து ஓமன் நாட்டு கடல் பகுதி அருகே கடலில் மூழ்கியது

பெருங்கடல் மற்றும் தொலை தூர கடல் பயணங்களுக்கு உதவும் நடுக்கடலில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களை பரிமாறும் இந்த கப்பல் ஈரான் நாட்டு கப்பல் படைக்கு பெர்சிய வளைகுடா பகுதியை தாண்டி செயல்பட பெரும் உதவியாக இருந்தது.

அதுமட்டுமல்லாது, இந்த கப்பலிலிருந்து சிறிய படகுகள் மூலம் கமாண்டோ வீரர்களை அனுப்பி அவ்வழியே செல்லும் மற்ற நாடுகளின் வணிக கப்பல்களையும் அடிக்கடி தாக்கி வந்தது.

சமீபத்தில் ஈரான் நாட்டுக்கு சொந்தமான ஒரு கமாண்டோ உதவி கப்பலை இஸ்ரேல் தாக்கியது, இருந்தாலும் கப்பல் பெருத்த சேதத்துடன் தப்பித்து விட்டது.

முதலில் வெளியான செய்தியில் கப்பலில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டதாகவும் கூறியது, கட்டுப்படுத்த முடியாத அளவு தீ பரவியதால் கப்பலை கைவிட்டுவிட்டு கப்பலில் இருந்த வீரர்கள் அனைவரும் வெளியேறினார். சுமார் 12 மணி நேரம் எரிந்த தீயினால் கப்பல் அப்படியே நீரில் மூழ்கியது.

ஈரானிடம் தீ அணைக்கும் உதவி கப்பல்கள் இல்லாததால் உதவிக்கு செல்ல முடியவில்லை, மேலும் பெர்சிய வளைகுடா பகுதியில் அனைத்து நாடுகளிடமும் பிரச்னை இருப்பதால், வேறு நாடுகளுக்கும் உதவிக்கு செல்லவில்லை.

இந்த கப்பல், அதுவும் ஈரான் நாட்டு போர்கப்பல்களிலேயே பெரிய போர்க்கப்பலான இது மூழ்கியுள்ளதால், ஈரான் நாட்டு கப்பல்கள் மேற்கொண்டு நெடுந்தூர பயணம் மேற்கொள்வது இயலாத காரியமாக இருக்கும்.

35,000 டன் எடை கொண்ட இந்த கப்பலை இங்கிலாந்து நாட்டிடமிருந்து 1984-இல் வாங்கி பயன்படுத்திவருகிறது.