ராணுவ பின்புலம் கொண்ட பாதுகாப்பு அமைச்சர் நாட்டுக்கு ஏன் தேவை ??

  • Tamil Defense
  • May 5, 2021
  • Comments Off on ராணுவ பின்புலம் கொண்ட பாதுகாப்பு அமைச்சர் நாட்டுக்கு ஏன் தேவை ??

ராணுவத்தில் பல்வேறு வகையான சீர்த்தருத்தங்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தற்போது ராணுவ பின்புலம் கொண்ட பாதுகாப்பு அமைச்சர் தேவை எனும் கருத்து எழுந்துள்ளது.

உண்மையை சொல்லப்போனால் மிக நீண்ட காலமாகவே இந்த விஷயம் மத்திய அரசு வட்டாரங்களில் குறிப்பாக பாதுகாப்பு துறையில் பேசப்பட்டு வருகிறது.

தற்போது சீர்த்தருத்தங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சீர்த்தருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் தரைப்படை அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் ப்ரகாஷ் மேனன் வலியுறுத்தி உள்ளார்.

இந்திய வரலாற்றில் இரண்டு முன்னாள் ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சர்களாக பணியாற்றி உள்ளனர்.

நேரு அவர்களின் அமைச்சரவையில் மேஜர் ஜெனரல் ஹிம்மத்சின்ஹ்ஜி ஜடேஜா துணை பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.

வாஜ்பாய் அவர்கள் அமைச்சரவையில் இந்திய தரைப்படையில் மேஜராக பணியாற்றி ஒய்வு பெற்ற ஜஸ்வந்த் சிங் குறுகிய காலத்திற்கு பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.

இவர்கள் இருவருமே அவர்களது அரசியல் திறமைக்காக அமைச்சர் பதவி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி கட்டுரையின் மையக்கருவிற்கு வருவோம், இந்தியாவுக்கு ராணுவ பின்புலம் கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ஏன் தேவை ??

மிக நீண்ட காலமாகவே பாதுகாப்பு துறை பற்றிய புரிதலற்ற குடிமைப்பணி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பாதுகாப்பு துறையை வழிநடத்தி வருகின்றனர்.

பல சமயங்களில் இதனால் படை நகர்வு, ஆயுத கொள்முதல் போன்றவற்றில் மிக தீவிரமான பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

ராணுவ பின்புலம் கொண்டவர்களுக்கு ராணுவத்தை பற்றிய நல்ல புரிதல் இருக்கும், எது தேவை எது தேவையற்றது போன்றவற்றை அனுபவ ரீதியாகவே அறிந்திருப்பார்கள்.

மேலும் ராணுவ நடவடிக்கைகள், நவீன கால போர்முறைகள், நவீன தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் பற்றியும் நன்கு அறிந்து இருப்பார்கள்.

இத்தகைய ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டால் ராணுவம் மென்மேலும் சிறப்பாக செயல்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தற்போதைய அரசிலேயே மிக திறமையான அமெரிக்காவில் ரேஞ்சர் பயிற்சி உள்ளிட்ட மல முக்கிய ராணுவ படிப்பு பயிற்சிகள் பெற்ற முன்னாள் தரைப்படை தளபதியான ஜெனரல் வி கே சிங் இணை அமைச்சராக அங்கம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் அரசிலும் பாதுகாப்பு அமைச்சராக பதவி அளிக்கப்படவில்லை அப்போது அத்துறைக்கு தொடர்பே இல்லாத நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு அமைச்சரானார்.

தற்போது இரண்டாவது அரசிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை ஆனால் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த நிலை மாறுவது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம், இஸ்ரேல் நாடு பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்க இதுவும் ஒரு காரணம்.

அமெரிக்காவில் பல அதிபர்கள் பாதுகாப்பு அமைச்சர்கள் உளவுத்துறை தலைவர்கள் முன்னாள் ராணுவ அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவிலும் இதே நிலை தான் உள்ளது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம்.