

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் நிலையில் அமெரிக்கா பாகிஸ்தான் ராணுவ தளங்களை பயன்படுத்தி ஆஃப்கானிஸ்தானுடைய பாதுகாப்பு நிலையை கண்காணிக்க விரும்புகிறது.
இதனை உறுதிபடுத்தும் வகையில் பாகிஸ்தான் அரசு தனது நாட்டு ராணுவ தளங்களை அமெரிக்க படைகள் பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்க உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கடந்த மாதம் 11ஆம் தேதி அந்நாட்டு தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேசும்போது வெளிநாட்டு படைகளை தங்கள் மண்ணில் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தார்.
தற்போதும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்த தகவல் குறித்த அறிக்கையில் இத்தகைய எந்தவொரு உடன்பாடும் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படவில்லை என கூறியுள்ளது.

ஆனால் ஏசியன் டைமஸ் பத்திரிகை கடந்த 2001ஆம் ஆண்டு பாகிஸ்தான் அமெரிக்க படைகளின் தரை மற்றும் வான்வழி உதவிக்காக போடப்பட்ட ஒப்பந்தம் இப்போதும் செல்லுபடியாகும் என செய்தி வெளியிட்டுள்ளது.
அதை போல சமீபத்தில் ஆஃப்கானிஸ்தான் சார்ந்த அமெரிக்க படைகளின் நடவடிக்கைக்கு தனது நாட்டு வான்பரப்பை பயன்படுத்தி கொள்ள பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா இந்த பிராந்தியத்தில் ஒரு தளம் அமைக்க ஆர்வமாக இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அதற்கு உதவினால் மீண்டும் அமெரிக்காவின் உற்ற நண்பன் என்ற பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறும் அத அந்நாட்டுக்கு மிகப்பெரிய வலுசேர்க்கும்.
அதே நேரத்தில் சீனா அமெரிக்க படைதளம் ஒன்று பாகிஸ்தானில் அமைவதை நிச்சயமாக விரும்பாது அதுவும் அங்கு தனது மிக முக்கியமான திட்டங்களை சீனா செயல்படுத்தி வரும் நிலையில் இதனை விரும்பாது என்பதும் குறிப்பிடத்தக்கது.