இலங்கையில் மினி சீனா ; நெருங்கும் ஆபத்து !!
சில நாட்களுக்கு முன்னர் இலங்கை பாராளுமன்றம் துறைமுக நகர பொருளாதார சட்டம் ஒன்றை நிறைவேற்றியது இதன் மூலம் கொழும்பு நகரம் சேவைகள் சார்ந்த தொழிற்சாலைகளுக்கான அந்நாட்டின் முதலாவது சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட உள்ளது.
இதற்காக சுமார் 269 ஹெக்டேர் நிலம் கடலில் இருந்து மீட்கப்பட்டு பணிகள் நடைபெறுவதற்கு இச்சட்டம் அனுமதி அளிக்கிறது இதற்கான ஒட்டெடுப்பில் 149 ஓட்டுகள் ஆதரவாகவும் 58 ஓட்டுகள் எதிராகவும் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சட்டத்தின்படி இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிர்வகிப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஒரு ஆணையத்தை நியமனம் செய்து அதிகாரம் வழங்குவார் என்பது கூடுதல் தகவலாகும்.
இந்த துறைமுக நகரத்தில் எந்த அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பணமும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த திட்டம் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை அடுத்த ஐந்து வருடங்களில் உருவாக்கும் எனவும் இதில் பெரும்பகுதி அந்நாட்டு குடிமக்களுக்கே செல்லும் என பாராளூமன்றத்தில் கூறியுள்ளார்.
சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த திட்டம் சீனாவின் கடல்சார் பட்டு பாதையில் முக்கிய அங்கம் வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இதன் மூலம் இலங்கை சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நகரம் வருங்காலத்தில் இலங்கையில் சீனாவின் காலனி நகரமாக மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை அதே நேரத்தில் நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கும்.
ஏற்கனவே பல்வேறு காரணங்களை கூறி இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா அத்துமீறி வரும் நிலையில் வெறுமனே 270 கிலோமீட்டர் தொலைவில் அமையும் இந்நகரம் இனி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் இரண்டாம் கருத்தில்லை.