
ஈராக் நாட்டின் மோசுல் நகருக்கு தென்கிழக்கே ஐ.எஸ் பயங்கரவாதிகள் வலுவாக இருக்கும் பகுதிகளை மீட்க ஈராக்கிய தரைப்படை கடுமையாக சண்டையிட்டு வந்தது,
ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகவும் வலுவாக இருந்த காரணத்தால் ஈராக்கிய தரைப்படையினர் வான்வழி தாக்குதலுக்கு கோரிக்கை விடுக்க,
ஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள இங்கிலாந்து விமானப்படையின் இரண்டு டைஃபூன் போர் விமானங்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றன,
பின்னர் இலக்குகளை அடையாளம் கண்டுவிட்டு இரண்டு “பேவ் வே” துல்லிய தாக்குதல் குண்டுகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது வீசின,
இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் ஈராக்கிய தரைப்படையினர் சண்டையிட்டு எஞ்சிய பயங்கரவாதிகளை வீழ்த்தினர்.
ஏற்கனவே இப்படி வடக்கு ஈராக்கின் மக்மூர் மலைப்பகுதியில் ஐ.எஸ் இயக்கம் வலுவாக இருந்த பகுதிகளை மீட்டெடுக்க இங்கிலாந்து விமானப்படை 10 நாட்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இங்கிலாந்தின் ஆபரேஷன் ஷேடர் நடவடிக்கையில் பங்கு பெற இங்கிலாந்து விமானப்படை எஃப்35 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் ஈராக் செல்ல உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.