
அமெரிக்கா தற்போது தென் கொரியா மீது விதித்திருந்த 42ஆண்டு கால ஏவுகணை தொழில்நுட்ப தடையை நீக்கியுள்ளது, இதன்மூலம் தென் கொரியா கொரிய தீபகற்ப பகுதியை தாண்டி செல்லும் ஏவுகணைகளை தயாரிக்க முடியும்.
கடந்த 1979ஆம் ஆண்டு அமெரிக்க மற்றும் தென்கொரிய தலைவர்கள் இணைந்து தென் கொரிய ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பை 180கிமீ ஆகவும், வெடிபொருள்களின் அளவு 500கிலோவாகவும் குறைக்க முடிவு செய்தனர் இதற்கு பதிலாக ஏவுகணைகள் தயாரிக்க அமெரிக்கா தொழில்நுட்பம் வழங்கியது.
இதன்பின்னர் வடகொரிய மிரட்டல்கள் அதிகரிக்கவே நான்கு முறை இந்த கட்டுபாடுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டது, பின்னர் கடைசியாக 1997ஆம் ஆண்டு ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பை 300 கிலோமீட்டராக அதிகரிக்க முடிவு செய்து அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர் வடகொரியா கடந்த 2017ஆம் ஆண்டு ஆறாவது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியதையடுத்து இந்த கட்டுபாடுகளை விலக்க முடிவு செய்தனர், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மறுபரிசீலனையில் திட எரிபொருள் ஏவுகணைகளை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

கடைசியாக மே 21ஆம் தேதி தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் நடத்திய ஆலோசனையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இனி தென்கொரியா எந்தவித கட்டுபாடுகளும் இன்றி 1000-5000 கிலோமீட்டர் தொலைவு செல்லும் பலிஸ்டிக் ஏவுகணைகள், நீர்மூழ்கி பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதில் ஐயமில்லை.