
சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் படைதளத்தில் இருந்து இரவுநேர ரோந்து பணிக்கு சென்ற மிக் 21 பைசன் ரக விமானம் மோகா அருகே விபத்தில் சிக்கியது,இந்த விபத்தில் சிக்கி விமானப்படை அதிகாரியும் விமானியுமான ஸ்க்வாட்ரன் லீடர் அபினவ் சவுத்ரி துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்தார்.
இதை பற்றி பேசிய விமானியின் தந்தை திரு. சத்யேந்திர சவுத்ரி எனது ஒரே மகனை இழந்துவிட்டேன் ஆனாலும் அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன் என்னை போல வேறு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இழக்காமல் இருக்க தயவுசெய்து அனைத்து மிக்21 விமானங்களையும் படையில் இருந்து விலக்குங்கள் என கூறினார்.
விமானியின் உறவினரான மருத்துவர். அனூஜ் டோகாஸ் அனைத்து மிக்-21 விமானங்களும் பைசன் ரகத்திற்கு தரம் உயர்த்தப்பட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லை மாறாக விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன, ஏன் மிக்21 விமானங்கள் மட்டுமே விபத்தில் சிக்கி வருகின்றன என கேள்வி எழுப்பினார்.
அதை போல பக்கத்து வீட்டை சேர்ந்த ஒய்வு பெற்ற கேப்டன். க்யான் சிங் பேசும்போது இந்திய அரசு பல கோடி ருபாயை ஒவ்வொரு விமானிக்கும் செலவு செய்து பயிற்றுவிக்கிறது ஆனால் அவர்களை ஏன் இந்த அரதப்பழைய விமானங்களை ஒட்டும்படி பணிக்கிறது என கேள்வி எழுப்பினார்.
இத்தகைய கேள்விகள் இனியும் அரசின் காதுகளிலும் எதிர்கட்சிகளின் காதுகளிலும் விழவில்லையா அல்லது கேட்காதது போல நடிக்கிறார்களா என தெரியவில்லை.