
கொரோனா இரண்டாம் அலை நம் நாட்டை மிக கடுமையாக பாதித்து உள்ளது, மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஒரு புறம் இருக்க மறுபுறம் தொடர் மரணங்கள் நமது சுகாதார அமைப்பில் உள்ள ஓட்டைகளை வெளிபடுத்தி உள்ளது.
இந்த சூழலில் கடைசி ஆயுதமான ராணுவத்தை களமிறக்க அரசு ஏனோ தயங்குகிறது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
கொரோனாவை கட்டுபடுத்த அமைக்கபட்ட கமிட்டியில் ராணுவ பிரதிநிதிகள் இடம்பெறவில்லை, பொறியியல் மருத்துவம் தொலைதொடர்பு என சகல துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்த அமைப்பை இப்படி ஒதுக்கி வைத்திருப்பது சரியில்லை.
நாடு முழுக்க அனைத்து மாநிலங்களிலும் ராணுவ கட்டமைப்புகள் உள்ளன ஆனால் அத்தகைய சீர்மிகு கட்டமைப்பு கொரோனாவுக்கு எதிரான போரில் விலக்கி வைகப்பட்டு உள்ளது.
முதல் அலையின் போது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மீட்பு விமான சாகசம் பேன்ட் வாத்தியங்கள் என்ற அளவில் தான் ராணுவம் பயன்படுத்தப்பட்டது.
தற்போது ஆக்ஸிஜன் போக்குவரத்து என்ற அளவிலேயே நிற்கிறது, ராணுவத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.
மிக கடுமையான போர்ச்சூழல்கள் போன்றவற்றை சமாளிக்கும் ராணுவத்திற்கு இதெல்லாம் அழுத்தமே இல்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.
2013 உத்தரகாண்ட் மீட்பு நடவடிக்கை இதற்கு சிறந்த உதாரணமாகும் உலகின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை என உலக நாடுகளால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவத்தில் 15 லட்சம் வீரர்கள் உள்ளனர், இவர்களில் பெரும்பாலானோருக்கு ஏற்கனவே தடுப்புசி செலுத்தப்பட்டு விட்டது, இவர்களை நேரடியாக களமிறக்க முடியும்.
ராணுவ பொறியாளர்களால் விரைந்து நாடு முழுக்க காலியான கட்டடங்கள், பணிமனைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை மருத்துவமனைகளாக மாற்ற முடியும், இது போக மருத்துவமனைகளை விரைந்து கட்டவும் முடியும்.
ராணுவத்தில் சுமார் 13000 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 1 லட்சம் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர், ஒய்வு பெற்றவர்களையும் அழைத்தால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் இவர்களையும் கொரோனாவுக்கு எதிரான போரில் களமிறக்கலாம்.
அதை போல மிகவும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் ராணுவத்தின் கள மருத்துவமனைகளை அமைக்க முடியும், ராணுவத்தால் சுமார் 100 படுக்கை வசதி கொண்ட 100 தீவிர சிகிச்சை கள மருத்துவமனைகளை அமைக்க முடியும்.
இத்தகைய கள மருத்துவமனைகளை மிக மிக குறுகிய காலத்தில் ராணுவத்தால் கட்டமைக்க முடியும் மேலும் இவற்றை தனியாக இயங்கும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்களை கொண்டு இயக்க முடியும்.
மொத்தத்தில் ராணுவத்திற்கு தற்போது தேவை நிதி, அதிகாரம் மற்றும் தெளிவான உத்தரவுகள் மட்டுமே.
மேலும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான துணை ராணுவ படையினர் இருக்கிறார்கள் துணை ராணுவ படையினரையும் அரசு பயன்படுத்தி கொள்ள முடியும்.