
நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இந்தியா தனது நட்பு நாடுகளிடம் உதவியை கேட்டுள்ளது.ஜெர்மனி,சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் இருந்து பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சனியன்று அதிகாலை 2மணிக்கு ஹின்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி-17 விமானம் சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.சிங்கப்பூரில் அதிகாலை 7.45க்கு தரையிறங்கிய விமானம் அங்கு நான்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்குகளை ஏற்றி இந்தியா வர உள்ளது.
பனகர் விமானப்படை தளம் வரும் இந்த விமானத்தில் இருந்து டேங்கர்கள் தரையிறக்கப்பட்டு அவசர இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.நாடு முழுவதும் உள்ள ஆக்சிஜன் தேவையான இடங்களுக்கு தொடர்ந்து ஆக்சிஜன்கள் வழங்க இந்த டேங்கர்கள் உதவும்.இதற்காக விமானப்படையின் போக்குவரத்து விமான பிரிவு உபயோகிக்கப்படும்.
தவிர உள்நாட்டுக்குள்ளேயே இந்த டேங்கர்களை அனுப்பும் வேலையில் விமானப்படை முழுதாக ஈடுபட்டுள்ளது.அதிகாலையில் ஹின்டன் விமானப்படை தளத்தில் இருந்து இரு நிரப்பாத டேங்கர்களுடன் புனே நோக்கி ஒரு சி-17 பறந்துள்ளது.புனேவில் ஆக்சிஜன் நிரப்பிய பிறகு விமானம் ஜாம்நகர் விமான தளத்தில் இந்த டேங்கர்களை தரையிறக்கும்.
அதே போல விமானப்படையின் சின்னூக் வானூர்திகள் ஜம்முவில் இருந்து பயோ சேப்டி கேபினட்களுடன் லே சென்றுள்ளது.