“ப்ராஜெக்ட் ஸீ பர்ட்” இந்தியாவின் மிகப்பெரிய கடற்படை தளம் !!

  • Tamil Defense
  • April 9, 2021
  • Comments Off on “ப்ராஜெக்ட் ஸீ பர்ட்” இந்தியாவின் மிகப்பெரிய கடற்படை தளம் !!

இந்திய கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கர்நாடக மாநிலம் கார்வரில் கட்டுபட்டு வரும் ஐ.என்.எஸ்ஶ்ரீ. கடம்பா கடற்படை தளத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ப்ராஜெக்ட் ஸீ பர்ட் எனும் பெயரில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த தளம் கட்டப்பட்டு வருகிறது.

இது நிறைவு பெறும் பட்சத்தில், உலகின் மிகப்பெரிய கடற்படை தளங்களில் ஒன்றாகவும், கிழக்குலகின் மிகப்பெரிய கடற்படை தளமாகவும், ஆசியா மற்றும் இந்தியாவில் மிகப்பெரிய கடற்படை தளமாகவும் இது இருக்கும் என்பது சிறப்பாகும்.

கப்பல்கள்,நீர்மூழ்கிகள், விமானங்கள், ரோந்து கலன்கள் என அனைத்தையும் நிலைநிறுத்தும் வகையிலும் சரிபார்ப்பு தளங்கள், விமான ஒடுதளங்கள், ஹாங்கர்கள், நவீன பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, கண்காணிப்பு அமைப்புகள், ஆயுத கிடங்குகள் ஆகியவற்றுடன் இது வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 50 முன்னனி போர் கப்பல்கள், அணுசக்தி மற்றும் டீசல் எலெக்ட்ரிக் நீர்முழ்கி கலன்கள், இந்திய கடற்படையின் போர் விமானங்கள் ஆகியவை இங்கு நிறுத்தப்படும்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல்கட்ட பணிகள் முடிவுற்றது, 2011ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது அடுத்த வருடம் இது முடிவு பெறும் என கூறப்படுகிறது.

இதையடுத்து மும்பை நகரில் இயங்கி வரும் இந்திய கடற்படையின் மேற்கு கட்டளையக படையணி இங்கு மாற்றப்பட்டு இங்கு இருந்து இயங்கும்.

இந்தியாவில் நிலத்தடி நீர்மூழ்கி தளங்களை உடைய இரண்டு கடற்படை தளங்களில் இது ஒன்றாகும் மற்றொன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.என்.எஸ். வர்ஷா படைத்தளத்தில் உள்ளது.