
தென் கொரியா கடந்த சில ஆண்டுகளாக ஸ்டெல்த் போர் விமான தயாரிப்பில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் ஆறு சோதனை விமானங்கள் சச்சியோன் நகரில் அமைந்துள்ள கே.ஏ.ஐ நிறுவன தொழிற்சாலையில் இறுதிகட்ட தயாரிப்பு பணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வருடம் முதல் இந்த விமானங்களை பல்வேறு வகையான சோதனைகளில் ஈடுபடுத்த உள்ளனர், பின்னர் 2028ஆம் ஆண்டு முழு வீச்சில் தயாரிப்பு பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது.
இந்த விமானங்கள் தற்போது 4.5 தலைமுறை விமானங்களாக வடிவமைக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் 5ஆம் தலைமுறைக்கு தரம் உயர்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விமானங்கள் முழு தயாரிப்பு நிலையை எட்டும் போது 1 லட்சத்து 10 ஆயிரம் வேலை உருவாகும் எனவும் தற்போதே 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும்,
இந்த விமானத்தின் தயாரிப்பு தென்கொரிய மக்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை பெருமளவில் ஊக்குவிக்கும் என கே.ஏ.ஐ நிறுவன அதிகாரிகள் கூறினர்.
இந்த விமானத்தில் 10 இடங்களில், 50 வகையான கூட்டு இணைப்பில் 7.7 டன்கள் அளவிலான ஆயுதங்களை சுமக்க முடியும் மேலும் 5 டன்னுக்கும் அதிகமான எரிபொருளை சுமக்க முடியும்.
இது தவிர ஏசா ரேடார், மின்னனு போர் அமைப்பு, இலக்குகளை கண்டுபிடிக்கும் அமைப்பு, நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி ஆகியவை உள்ளன.
இந்த விமானம் அமெரிக்க எஃப்22 மற்றும் எஃப்35 ரக விமானங்களுக்கு சளைத்தது அல்ல எனவும்அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.