மீண்டும் மீண்டும் இந்திய கடற்படைக்கு இழைக்கப்படும் அநீதி !!

  • Tamil Defense
  • March 1, 2021
  • Comments Off on மீண்டும் மீண்டும் இந்திய கடற்படைக்கு இழைக்கப்படும் அநீதி !!

இந்திய கடற்படை காலம் காலமாகவே பட்ஜெட் என்று வருகையில் ஒதுக்கப்பட்டு வருகிறது ஆனால் சீனா 2049 வாக்கில் உலகின் மிகப்பெரிய சக்திவாய்ந்த கடற்படையாக மாறும் இலக்கை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது.

தரைப்படை மற்றும் விமானப்படைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கடற்படைக்கு அளிக்கப்படுவது இல்லை. வரலாறு தந்த படிப்பினைகள் , புவிசார் அரசியல் சிக்கல்களை தாண்டியும் இத்தகைய நிலை நிலவுகிறது.

இந்த வருடமும் ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பட்ஜெட்டில் குறைபாடு நிலவுகிறது 37ஆயிரம் கோடிகள் மட்டுமே தளவாட கொள்முதலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மூன்று படைகளிலும் அளவில் சிறியதாகவும், ஒதுக்கப்படும் படையாகவும் இந்திய கடற்படை உள்ளது.

இந்த நிலை நீடித்தால் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கம் சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ராணுவ நகர்வுகள் மிக நீண்ட காலத்திற்கான தொலைநோக்கு பார்வையை அடிப்படையாக கொண்டவை அது ஒரு நாட்டின் அரசியல் தலைமைக்கு மிக முக்கியமானது.

கடந்த 1988ஆம் ஆண்டு அப்போதைய சீன அதிபர் டெங் ஜியோபிங் மூன்று கட்ட திட்டங்களை சீன கடற்படைக்கு செயல்படுத்தினார்.

1) 2000ஆவது ஆண்டு வாக்கில் சீன கடற்படை தனது நிலபரப்பிற்கு அருகேயுள்ள கடல்பகுதிகள், குரில் தீவுகளில் இருந்து ரியுகு, ஃபிலிப்பைன்ஸ் வழியாக இந்தோனேசியா வரையிலான பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.

2) 2020ஆம் ஆண்டு வாக்கில் குரில் தீவுகளில் இருந்து ஜப்பான் , மரியானா, பலாவு, இந்தோனேசியா, சிங்கப்பூர் வழியாக மலாக்கா ஜலசந்தி வரை தனது சக்தியை அதிகரிப்பது.

3) 2049ல் சீன புரட்சியின் நூற்றாண்டு விழாவில் உலகளாவிய சக்தியை பெறுவது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இவற்றில் முதல் இரண்டு இலக்குகளை சீனா அடைந்து விட்டது தற்போது மூன்றாவது கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது, இனி மலாக்கா ஜலசந்தி தாண்டி இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை சீனா அதிகரிப்பது மிக முக்கியமான விஷயம் ஆகும்.

ஆகவே இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பட்ஜெட்டில் கடற்படைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

நீர்மூழ்கிகள், நாசகாரி,ஃப்ரிகேட், கார்வெட், கண்ணிவெடி போர்முறை, நிலநீர் போர்முறை கலன்கள் அதிக அளவில் வேண்டும்.

அதிக பி8ஐ போன்ற விமானங்கள் அவசியம், புதியதாக மரைன் படை உருவாக்கப்பட வேண்டும்.

கடலோர காவல்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சி மற்றும் கருவிகள் வழங்கப்பட வேண்டும்.