மொரிஷியஸில் சத்தமில்லாமல் இந்தியா உருவாக்கி வரும் படை தளம்: சிறப்பு கட்டுரை !!

  • Tamil Defense
  • March 5, 2021
  • Comments Off on மொரிஷியஸில் சத்தமில்லாமல் இந்தியா உருவாக்கி வரும் படை தளம்: சிறப்பு கட்டுரை !!

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை மொரிஷியஸில் இந்தியா சத்தமில்லாமல் படை தளம் ஒன்றை கட்டி வருகிறது.

மொரிஷியஸில் இருந்து 1,110 கிலோமீட்டர் தொலைவிலும், இந்தியாவின் தென்கோடியில் இருந்து 3,095 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது அகலேகா தீவுகள்.

மொரிஷியஸ் நாட்டின் ஒரு பகுதியான இந்த தீவுகள் வடக்கு மற்றும் தெற்கு என இரு தீவுகளாக அமைந்துள்ளன, இந்த இரு தீவுகளிலும் 300 பேர் தான் வசிக்கிறார்கள், இவர்களின் வாழ்க்கை தரமும் உயர இந்தியா வழிவகை செய்யும் என இந்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இவற்றில் வடக்கு தீவு 12.5கிலோமீட்டர் நீளமும் 1.5கிலோமீட்டர் அகலமும் கொண்டது, தெற்கு தீவு 7கிலோமீட்டர் நீளமும் 4.5கிலோமீட்டர் அகலமும் கொண்டது.

இதில் வடக்கு அகலேகா தீவை மொரிஷியஸ் அரசு குத்தகை அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கி உள்ளது இதை தொடர்ந்து பல்வேறு கட்டுமான பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன.

2014ஆம் ஆண்டில் அங்கு ஒரு சிறிய விமான ஒடுதளம் இருந்தது ஆனால் தற்போது அதுவும் மேம்படுத்தப்பட்டு புதியதாக 3000மீட்டர் நீளம் கொண்ட புதிய விமான ஒடுதளமும் ஒரு கட்டுபாட்டு மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் தீவின் வடக்கு முனை பகுதியில் இரு படகுத்துறைகள், வீரர்களுக்கான உறைவிடங்கள், விளையாட்டு மையம், அணிவகுப்பு வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன, இது ஒடுதளத்திற்கு அருகில் வடக்கே அமைந்துள்ளது.

தற்போது இந்த பகுதிகளில் ரேடார்கள், எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை காண முடியவில்லை அடுத்தடுத்த கட்டுமானங்களுக்கு பிறகு இவை அமைக்கப்படும் என தெரிகிறது.

இந்த படைதளம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இணைந்து இயக்கும் டியாகோ கார்சியா படைதளம் போன்றது என கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் இங்கிருந்து இந்திய போர் கப்பல்கள், பி8ஐ கண்காணிப்பு விமானங்கள், போர் விமானங்கள் இயக்கப்படும் மேலும் மொரிஷியஸ் பாதுகாப்பு படைகளும் இங்கிருந்து இந்திய படைகளுடன் இணைந்து செயல்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த தளத்தை இந்தியா தகவல் கண்காணிப்பு இடைமறிப்பு, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஃப்ரிக்க கண்டத்தின் தெற்கு பகுதியில் பெருமளவில் எண்ணெய் வர்த்தக கப்பல்கள் பயணிக்கின்றன இந்த கப்பல்களில் பெரும்பாலானவை சீனாவுக்கு செல்பவை ஆகும் ஆகவே அந்த பகுதியில் அமைந்துள்ள அகலேகா தீவுகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலம் ஆகும்.

இந்தியா இதை போலவே செஷல்ஸ் அரசாங்கத்துடனும் ஒரு தளம் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, ஏற்கனவே ஜிபூட்டியில் உள்ள ஜப்பானிய ராணுவ தளத்தை பயன்படுத்தி கொள்ளவும் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் உதவும் என்பதை மறுக்க முடியாது.